இலங்கை

வைத்தியசாலையில் அரைவாசி கொரோனா தொற்றாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இப்பொழுது காணப்படும் கட்டில்களின் அளவில் சரி அரைவாசியினை கொரோனா தொற்றாளருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் நேற்றைய கூட்டத்தின் போதே இம்முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்கள் இயலுமானவரை தனிப்பட்ட ரீதியில் கொரோனா நோயாளர்களை இனம்கண்டு, தகவல்களை உறுதிசெய்து, சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியில் ஒருமத்திய நிலையத்தை ஸ்தாபித்து, அனைத்து கொரோனா தொற்றாளரையும் சோதனைக்கு உட்படுத்திய பின், தொற்றாளர்களை அனுப்பி வைக்ககூடிய சிகிச்சை நிலையங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும்  அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு அழைத்து செல்லவும் அம்பியூலன்ஸ் வண்டிகள் போதுமானதாக இல்லை என்பதால், கொரோனா நோயாளர்களிற்கான சேவைகளினை முன்னெடுக்க போதுமானளவு அம்பியூலன்ஸ் வண்டிகளை ஈடுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடலின் போது யோசனைகள் முன் வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு Antigen பரிசோதனை மேற்கொள்ளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அபாயநிலையில் உள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு விரைவாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் அமுல்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிராமங்களுக்குள் மக்கள் தேவை இல்லாமல் நடமாடுவதாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிராமங்கள் / நகரத்தை அண்மித்த பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் இனம் காணப்படும் போது இவ்விடயங்கள் தெரியவருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல்ரோஹன தெரிவித்தார்.

ஆகவே உயிரை பாதுகாக்க, இப்போதைய அபாய நிலையை கருத்தில்கொண்டு பொறுப்புணர்வுடன் எல்லோரும் செயற்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button