90 லட்சம் ரூபா (45ஆயிரம் அமரிக்க டொலர்) மாத சம்பளத்தில் பிரித்தானிய பொதுமகன் ஒருவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகா ரியாக பிரித்தானிய பிரஜையான ரிச்சர்ட் நட்டலை நியமிக்கும் தீர்மானத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்திலும் இந்த விடயத்தை ஜேவிபியின் உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார். குறித்த பிரித்தானிய நபரான நட்டால் 11 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இந்நிலையில் 14 மாதங்களுக்குப் பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இத்தீர்மானத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள பொது விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ, இதே பதவியில் ஏற்கனவே பணியாற் றியவர் 20 ஆயிரம் அமெரிக்க டொலர் களை மாதச் சம்பளமாகப் பெற்றார் எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதவிக்காகத் தகுதியான 20 இலங்கையர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் எந்தவொரு நேர்காணலும் நடத் தாமல், வெளிநாட்டவரை இந்தப் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
73 வயதான நட்டால், 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளதோடு, இவர் ராயல் ஜோர்டானியன் ஏர்லைன்ஸ், கேத்தே பசுபிக் ஏர்வேஸ், பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ், கென்யா ஏர்லைன்ஸ் மற்றும் போலார் ஏர் கார்கோ ஆகியவற்றில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.