சீன உற்பத்தி சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை!
சீனாவில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை விதிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்யும் நோக்கில் அதற்காக சில பசளை மாதிரிகளும் இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பசளை இலங்கையின் மண் வளத்துக்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதாக விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தது.
குறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்துக்குக் கிடைக்கப்பெற்ற போது, அவை திறந்த நிலையில் காணப்பட்டதாக சந்தர்ப்பமொன்றில் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவ்வாறு முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துகளின் காரணமாகச் சேதன பசளை இறக்குமதி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
குறித்த உற்பத்தி தொடர்பில் இரண்டு தடவைகள் மேற்கொண்ட பரிசோதனையில் சேதன பசளை இலங்கைக்கு பொருத்தமற்றது என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.