சினிமா

18 வயது இளைஞனை பாராட்டிய இயக்குனர்!

18 வயது இளைஞர் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

பதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’ என்ற 50- நிமிட-திரைப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

சமீபத்தில் காற்றினிலே படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு தனது கருத்துகளைப் பகிர்ந்த பாக்யராஜ், “ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முதல் காட்சி மிகவும் முக்கியமானது, அதை இந்த இளம் குழு அற்புதமாக செய்துள்ளது. இயக்குநர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டும். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் நண்பர்களையும் பாராட்டுகிறேன். தங்கள் மகனின் ஆர்வத்தை அடையாளம் காட்டியதற்கும், அவர் விரும்பிய பாதையில் தொடர ஊக்குவிப்பதற்கும் ஈஸ்வரின் பெற்றோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்றார்.

இவ்வளவு இளம் வயதிலேயே சிறப்பான ஒரு படத்தை ஈஸ்வர் உருவாக்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறினார். “இந்த இளம் குழுவினரின் திரைப்படத்தின் தரம் உண்மையில் பாராட்டத்தக்கது. முழு அணியின் கடின உழைப்பும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கிய ஈஸ்வர் திரைப்பபடத்தைப் பற்றி பேசுகையில், “ஆறாம் வகுப்பிலிருந்து நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை உருவாக்க தொடங்கினேன். பின்னர் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க விரும்பினேன், இதன் விளைவாக இப்போது ‘காற்றினிலே’ உருவாகியுள்ளது. என் பெரியப்பா ஒளிப்பதிவாளர் எம் வி பன்னீர்செல்வம் எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை எனது முன்மாதிரியாக கருதுகிறேன். இந்தப் படத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு, அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில காட்சிகளும் உள்ளன” என்றார்.

அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் காற்றினிலே திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஈஸ்வரின் தாயார் விஜி பாலசந்தர் தயாரித்துள்ளார். யோகான் மனு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சுதர்ஷன் ஆர் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button