தலைமன்னார் கடற்கரை பகுதியில் கடற்படையினரால் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 9.735 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்தின் அடிப்படையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்ட போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது மீன் படகில் காணப்பட்ட மீன்பிடி வலைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் 10 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார் பொலிஸாருக்கு கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் பொலிஸார் விரைந்து சென்று குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருளை மீட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தற்போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.