இந்தியா

கொரோனாவால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த நர்சு!

கேரள மாநிலத்திற்கு உட்பட்ட திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியினை  சேர்ந்தவர் ஸ்ரீஜா.

இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதி குடும்ப நல மையத்தில் நர்சாக பணியாற்றிவருகிறார்.

நர்ஸ் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்த போது இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது  குழந்தையினை அவரின் வீட்டுக்கு எடுத்து வந்தார்.

அக்குழந்தை உயிரிழந்து விட்டதாக கருதிய குழந்தையின் தாய் கதறி அழுதார். குழந்தையை கையில் வாங்கிய நர்ஸ் ஸ்ரீஜா, கொரோனா தொற்று குழந்தைக்கு ஏற்பட்டதால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறலுக்கு  குழந்தை உள்ளாகி மயங்க நிலையில் இருப்பதை புரிந்து கொண்டார்.

குழந்தைக்கு உடனடியாக செயற்கை சுவாசம் வழங்காவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக செயலில் இறங்கினார்.

தாயிடம் இருந்து குழந்தையை வாங்கி அந்தகுழந்தையின் வாயோடுவாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல்உதவி செய்தார்.

இப்படி பல முறை செய்தமையால் குழந்தையின் உடல் நிலை சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குழந்தை மெதுவாக கண் திறந்து பார்த்தது.

இதன்பின் குழந்தையை உடன் அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கே குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்  சிகிச்சைக்காக அங்குள்ள  மருத்தவகல்லூரி ஆஸ்பத்திரியில்  கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில்  செயற்கைசுவாசம் அளித்தமையினால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக நர்சுக்கு டாக்டர்கள் பாராட்டு  தெரிவித்தனர்.

இது தொடர்பில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றிய நர்சு ஸ்ரீஜா கூறியதாவது:-

தாயின்தோளில் குழந்தை மயங்கிய நிலையில் இருந்தபோதே அதன் நிலையை புரிந்துகொண்டேன். கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் தொடர்வாந்தியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு  குழந்தை மயக்க நிலையில் இருந்தது. கொஞ்சம் தாமதம் செய்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் .

எனவே, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கைசுவாசம் அளித்தேன். அதுமிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம்.  எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படவில்லை என கூறினார்.

குழந்தைக்கு வாயோடு வாய்வைத்து செயற்கை சுவாசம் அளித்த ஸ்ரீஜா இப்பொழுது வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button