நாடு முழுவதிலும் அவசரகால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தி இருக்கின்றமை தேவையற்ற ஒரு நடவடிக்கை.
அதன் கீழ் அடக்குமுறை கட்டவிழும் பேராபத்து இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கின்றது.
ஜனாதிபதியின் அந்த முடிவைக் கூட்டமைப்பு கடுமையாக ஆட்சேபித்து கண்டனமும் தெரிவித்து இருக்கின்றது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று மாலை தெரிவித்தவை வருமாறு:-
பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியை நடைமுறைக்கு கொண்டு வந்ததன் மூலம் திங்கட்கிழமை நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இது ஒரு தேவையற்ற நடவடிக்கை. நாடு முழுவதிலும் அடக்குமுறைக்கு இது வழிப்படுத்தக் கூடும்.
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால் அதோடு சம்பந்தப் பட்ட விவகாரங்களைக் கையாளத்தான் இந்த சட்டத்தின் கீழான அவசரகால நிலையைப் பாவிக்க முடியும்.
சுகாதார அவசரகால நிலைமையைக் கையாளும் சட்டம் அல்ல இது. அதனால்தான் பொது மக்களின் பொது சுகாதார அவசரகால நிலைமைகளைக் கையாள்வதற்கான ஓர் அவசரகால சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தோம்.
நாடாளுமன்றம் ஒரு வருடத்திற்கு மேல் செயற்பாட்டில் இருந்தும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அதற்கான ஒரு தனிநபர் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நானே பிரேரித்திருந்தேன்.
அதை எடுத்து நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. ஆனால் இப்போது அவசரகாலச் சட் டத்தின் கீழ் பொதுசனப் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி ஜனாதிபதி பிரகடனம் செய்திருக்கின்றார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற தோரணையில் இப்பொழுது இதனைச் செய்திருக்கிறார்கள். இதன் ஆபத்து என்னவென்றால் இதைத் தொடர்ந்து முற்று முழுதாக ஜனாதிபதியின் ஆட்சியே நடக்கும்.
ஜனாதிபதி தாம் விரும்பிய சட்டங்களை – அவசரகால விதிமுறைகளை – வகுக்க முடியும். சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களை சமூகத்திற்கு விநியோகிப்பதை உறுதிப்படுத்துவது என்ற ஏற்பாட்டில் இந்த அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டாலும், அத்தகைய விநியோகங்களில் இப்போது நெருக்கடி நிலை ஏதும் இல்லாதபோதும், அதன்பேரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது.
அந்த அத்தியாவசிய சேவை விடயங் களையும் தாண்டி இந்த அவசரகாலச் சட்டம் மக்கள் மீது அடக்குமுறையாகப் பாயலாம் என்பதால் இதனை நாங்கள் வலுவாக கண்டிக்கிறோம். – என்றார்.