முஸ்லீம்களை வெளியேற்றியமை இன சுத்திகரிப்பே – மீண்டும் சுமந்திரன்

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை இன சுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன்.

விடுதலைப்புலிகளின் இன சுத்திகரிப்பினால் வெட்கி தலை குனிகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன்  இதனைத் தெரிவித்திருந்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு என்றே நான் கருதுகின்றேன்.

தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாம் சொல்கிறோம்.

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

அதனை திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லை என நான் சொன்னதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமானமாகும்.

நடந்த இனப்படுகொலையை சர்வதேசத்திடம் ஏற்றுக் கொள்ள சொல்லும் நாம் நடைபெற்ற இன சுத்திகரிப்பை மறுத்தால் சர்வதேசம் எம்மை ஏற்றுக்கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயம். நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது.

அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது. ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 22 வயது பெண் கொரோனாவால் பலி!

Exit mobile version