தினமும் ஐயாயிரம் தொற்றாளர்கள், 250இற்கு அதிகமான மரணங்கள்!

தினமும் 5ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதோடு, 250ற்கு அதிகமான மரணங்கள் பதிவாவதாக வைத்தியசாலைகளில் இருந்து உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

இவ்வாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையிலேயே இது  கூறப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் காணப்படுகின்றமை இதன்மூலம் புலனாவதாகவும் நிலைமை உக்கிரம் அடைந்துள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் உயிர்கள் மிகவும் பெறுமதியானது என்பதால், நிபுணர்களது ஆலோசனைகளை கருத்தில் எடுத்து, குறுகிய காலத்திற்கேனும் நாட்டினை முடக்க வேண்டுமென எதிர்க்கட்சிதலைவர் சஜித்பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று முதலில் அடையாளம் காணப்பட்ட போது நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டதாகவும், அரசாங்கமே பொறுப்பின்றி செயற்பட்டதாகவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிச்சையான தீர்மானங்களின் மோசமான முடிவுகளை அப்பாவி மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் உயிர்களுடன் விளையாடுவதாகவும் இறுதியில் பேரவலத்தை ஏற்படுத்தும் என்பதை விரைவில் புரிந்து கொள்ள முடியும் எனவும் எதிர்கட்சி தலைவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version