இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுவரும் கொரோனா மரணங்களும் தொற்றாளர் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்தால், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் 18ஆயிரம் கொரோனா தொற்றாளர்களில் உயிரிழப்பார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனமானது இலங்கையை சேர்ந்த 30 விசேட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து தயார் செய்த அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சிடம் நேற்று இவ்வறிக்கை கையளிக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து இலங்கையர்களை பாதுகாப்பதற்கென பல பரிந்துரைகளையும் இவ்வறிக்கை முன்வைத்துள்ளது.
பயண கட்டுபாடுகளை கடுமையாக்குவது, மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்கு பதிலாக மாவட்ட பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், சிறிது காலத்திற்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துதல், சகல பொது விழாக்களையும் மூன்று வாரங்களுக்கு தடைசெய்தல்,
மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்தல், சுகாதார ஊழியர்களை பாதுகாத்தல்,பலன் தரும் தொடர்பாடல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு தெளிவுப்படுத்துதல், தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்களை வழங்குதல்,
அதேபோன்று 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளை வழங்குதல் ஆகியன இந்த பரிந்துரைகளில் அடங்கியுள்ளன.