உலகம்

ஒலிம்பிக்கில் முறியடிக்கப்பட்டதா உசைன் போல்ட்டின் சாதனை?


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீ. ஓட்டம் முடிந்து விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

என்னது யார் வென்றார்களா?

இதில் இத்தாலியை சேர்ந்த மார்செல் ஜகோப்ஸ் 9.80 நொடிகளில் வென்றார்.

இதுவே உசைன்போல்ட் பங்கேற்று இருந்தால் இந்நிலைமை இருந்திருக்குமா?

அதுதான் போல்ட்டின் மகிமை. அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற காலங்களில், போட்டி நடைபெறும் நேரம் நள்ளிரவாக இருந்தாலும் மக்கள் கண்விழித்து ஆவலோடு பார்த்து கொண்டு இருப்பார்கள். அப்படி ஒரு வீரர் இனி எப்போது கிடைப்பார்?

ஒலிம்பிக்கில் ஏனைய போட்டிகளை விட தடகள போட்டிகளுக்குதான் முக்கியத்துவம் அதிகம். அதில் ராஜாவாகத் திகழ்ந்தவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். பீஜிங், லண்டன், ரியோ ஒலிம்பிக் போட்டிகளைத் திருவிழாக்களாக மாற்றியவர்.

2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் 2 தங்கம் என மொத்தம் 8 ஒலிம்பிக் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

பலருக்கும் ஜமைக்கா எனும் நாட்டை அறிமுகம் செய்ததே போல்ட் தான்.

மேற்குறித்த மூன்று ஓட்ட பந்தயங்களிலும் போல்ட் வசமே உலக சாதனைகள் உள்ளன.

நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்ட பந்தயங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தவர் போல்ட்.

2008, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் 4*100 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் போல்ட்.

ஆனால் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் அவருடைய அணியில் இடம்பெற்ற நெஸ்டா கார்டர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் 2017-ல் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது.

இதனால் ஒலிம்பிக் போட்டியில் போல்ட் பெற்ற ஒரு தங்கபதக்கம் குறைந்து விட்டது.

100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலகசாதனை செய்தார் போல்ட். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் போல்ட்டின் சாதனை முறியடிக்க படவில்லை. இனியாரால் முடியும் என்றும் தெரியவில்லை.

2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உசைன்போல்ட், விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

2008, 2012, 2016 ஒலிம்பிக்கில் எல்லாம் உசைன்போல்ட் பங்கேற்கும் போட்டிகள் எப்போது நடைபெறும் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு மிகுதியாக இருக்கும். முக்கியமாக 100 மீ. ஓட்டபந்தயத்தை தொலைகாட்சியில் பார்ப்பதை தவறவிட்ட விளையாட்டு ரசிகர்களே இருக்கவே முடியாது.

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன்பே 100 மீ. ஓட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தியவராக அறியப்பட்டார் போல்ட். இதனால் அவருடைய வெற்றி பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

பீஜிங்கில் 100 மீ. ஓட்டத்தில் முதல் 60 மீ. வரை அசுரவேகத்தில் ஓடிய போல்ட் கடைசிக்கட்டத்தில் வெற்றி உறுதிசெய்யப்பட்டவுடன் வேகத்தைக் குறைத்து கொண்டாட்டத்துடன் ஓட்டத்தை முடித்தார்.

9.69 நொடிகள். அதே வேகத்தில் ஓடியிருந்தால் நிச்சயம் இன்னும் குறைவான நேரத்தில் அவரால் 100 மீ. தூரத்தைக் கடந்திருக்க முடியும்.

ஆனால், தனக்கு உலகசாதனை முக்கியமல்ல, ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே லட்சியம் என்று வித்தியாசமாகப் பேட்டியளித்தார் போல்ட்.

முதல் ஒலிம்பிக் போட்டியில் மேலும் பல தங்கங்களை வெல்ல குறி வைத்தார் போல்ட். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கார்ல் லூயிஸ் இரு தங்கம் வென்றார். அதைத் தாண்ட வேண்டும் என நினைத்தார்.

200 மீ. ஓட்டத்தில் மற்றொரு புதிய உலக சாதனையுடன் 19.30 நொடிகளில் வெற்றி பெற்றார். இரு நாள்களுக்குப் பிறகு 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் போல்ட். இதிலும் புதிய உலக சாதனை.

முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே மூன்று தங்கம், மூன்று உலக சாதனைகள் என ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்தச் சமயத்தில் ஊக்க மருந்தை போல்ட் பயன்படுத்தியிருப்பாரோ என்கிற சந்தேகமும் பலருக்கும் ஏற்பட்டது.

ஆனால் நான்கு முறை சோதனை செய்தும் போல்ட் மீது ஒரு குறையையும் யாராலும் சொல்ல முடியவில்லை. கடின உழைப்பாலும் முயற்சியாலும் கிடைத்த பலன் இது என்றார் போல்ட்.

2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் 100 மீ. ஓட்டத்தில் கார்ல் லூயிஸுக்குப் பிறகு தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டார் போல்ட். இந்த உலகில் வாழும் மகத்தான தடகள வீரன் நான் எனத் தன்னைப் பெருமையாகக் கூறிக்கொண்டார்.

பிறகு 200 மீ. ஓட்டத்திலும் தங்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்ட முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பிறகு 4*100 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார்.

இதே வெற்றிகளை 2016 ரியோ ஒலிம்பிக்ஸிலும் தொடர்ந்தார் போல்ட். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கங்களை வென்று உலக சாதனை படைத்தார். (2017-ல் தான் ஒரு ஒலிம்பிக் தங்கம் பறிக்கப்பட்டது.)

ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுக்குத் தோல்வியே ஏற்பட்டதில்லை. மூன்று ஒலிம்பிக்ஸில் மூன்று போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் தங்கம் வென்றார். 100% வெற்றி.

ஆனால் தான் பங்கேற்ற கடைசிப் போட்டியில் தங்கம் பெறாமல் திரும்பினார் போல்ட். 2017 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் போல்ட்டுக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

தனது கடைசிப் பந்தயத்தில் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் பாதி வழியில் காயம் ஏற்பட்டதால் போட்டுக்குத் தோல்வியே கிடைத்தது. பாதி வழியில் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் ஓடுவதை நிறுத்தி தடுமாற்றத்துடன் நடந்தார் போல்ட்.

கடைசியில் அப்படியே ஆடுகளத்தில் சாய்ந்துகொண்டார். அவரை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி வந்தது. அதை மறுத்துவிட்டார். பிறகு தன் அணி வீரர்களின் உதவியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியே வந்தார். அப்படியொரு மகத்தான வாழ்க்கை, இறுதியில் லேசான சறுக்கலுடன் முடிந்தது.

மின்னல் வேக வீரன் என்றால் எந்தத் தலைமுறையும் உசைன் போல்ட் பெயரையே சொல்லும்.

உசைன் போல்ட் வசமுள்ள உலக சாதனைகள்

100 மீ. ஓட்டம் – 9.58 நொடிகள்
200 மீ. ஓட்டம் – 19.19 நொடிகள் –
4*100 மீ. தொடர் ஓட்டம் – 36.84 நொடிகள் (2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button