ஜோதிடம்

குழந்தை இன்மைக்கு காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்

இன்றைய நவீனகால கட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண்குழந்தை ஆணிடம் இருந்துதான் பெறப்படுகிறது என அறியமுடிகிறது. முன்பெல்லாம், பெண் ஆண்மகவை பெற்றுதரவில்லை என்பதால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொல்வார்கள்.

அதேபோல் ஒருபெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அந்தபெண்ணை தள்ளிவைத்து விட்டு வேறுபெண்ணை; அதுஅவளின் சகோதரியாக கூட இருக்கலாம், அந்தபெண்ணை திருமணம் செய்விக்க சொல்லுவார்கள். பிள்ளைபெறாத அந்தபெண்ணின் மனதையும், உடலையும் நோகடிக்க செய்வார்கள். அதுவும் ஆணைவிட பெண்களே, அதாவது நாத்தனார், மாமியார், அண்டை மற்றும் அயலார் வீட்டு பெண்களே, அதற்கு காரணமாக இருப்பார்கள்.

இப்போது கூறபோவதை நன்றாக மனதில் ஆழபதிய வைத்துகொள்ளுங்கள். எந்தஒரு பெண்ணுக்கும் குழந்தைபேறு இல்லை என்பதே இல்லை. அதாவது குழந்தைபேறு இல்லாத பெண் என்பதேஇல்லை. குழந்தைபேறு இல்லாத ஆண்தான் உண்டு.

இதற்கு ஜோதிடம் கூறும் விதிகளை ஏன்மறைத்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாகக் கூறமுடியவில்லை. அந்த காலத்தில் சிலஜோதிடர்கள் தமது பிழைப்புக்காக மற்றும் கௌரவத்திற்காக – பெரும் பணக்காரர்களுக்கும், ஏன் அரசர்களுக்கும் இவ்வாறு ஆணின்தவறை, ஆணின்உடலில் உள்ள குறையை மறைத்து பெண்மீது, அந்தகாலத்தில் பலஅநீதிகளை பெண்ணுக்கு அளித்ததுபோல், பெண்மீது பழிசுமத்தி ஆணுக்கு சாதகமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என இன்று அறியும் போது மிகவும் வேதனையாகவும், அவர்களின் மீது வெறுப்பையும் காட்டவேண்டியதாக உள்ளது. இதுபோல் செய்தது வேற்றுகிரக வாசிகளில்லை, நமது முன்னோர்கள்தான்.

ஜோதிடம் ஒரு அருமையான அறிவியல் மற்றும் கலைஆகும். எனது குருநாதர் கூறுவார், “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருநன்கு கற்றறிந்த ஜோதிடர் இருக்கவேண்டும்” என. இதைஇங்கு நானும்கூற கடமைப்பெற்றுள்ளேன்.

நிற்க, ஜோதிடம் மூலம், குழந்தை பிறக்க தகுதியான ஆண் மகனா அல்லது பெற்று தர ஒரு பெண் தகுதி ஆனவளா என பிறப்பு ஜாதகம் கொண்டே அறிய முடியும். மேலும், அப்படி இல்லையெனில் மருத்துவ உதவி பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்பதனையும் அறிய ஜோதிடத்தில் நமக்கு பராசரர் மற்றும் அதற்கு பின்வந்த ஜோதிட விற்பன்னர்கள் அன்றே ஜோதிடம் மூலம் அருமையாகக் கூறியுள்ளனர்.

ஒரு ஆண், குழந்தை பிறக்க தகுதி உள்ளவனா, அதாவது உயிர் அணுக்கள் அவனுக்கு சரியான நிலையில் உள்ளதா அல்லது மருத்துவத்திற்கு பின்னர் உயிர் அணுக்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமா என்பதனை அவனின் பிறப்பு ஜாதகமே கூறிவிடும். அதற்கான சில ஜோதிட விதிகளும் கணக்குகளும் தெள்ளத் தெளிவாக உள்ளது.

அதேப்போல் ஒரு பெண் சாதாரணமாகவே ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தகுதி வாய்ந்தவளா அல்லது மருத்துவ துணையுடன் பெற்றெடுக்கும் தகுதி பெற்றவளா என்பதனையும் ஜோதிடம் தெளிவாக விளக்கிவிடும். குழந்தை பெறமுடியாத நிலை இருவருக்கும் (ஆண்/பெண்) ஏற்படுமா என்பதனையும் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு தத்து பிள்ளை எடுக்க முடியுமா? அல்லது அதற்கும் பாக்கியம் உள்ளதா? இல்லையா என்பதனையும் அறிந்து கொள்ள ஜோதிடத்தில் வழி உள்ளது. ஜோதிட விதிகள் மற்றும் கணக்குகள் உள்ளது.

அவை அனைத்தையும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். அவற்றை சரியான முறையில் தாங்களாகவே காண முடியாதபோது, தங்களுக்கு அருகில் இருக்கும் இந்த வகையில் பார்த்து சொல்லும் ஜோதிடர் இருப்பின்; அவரின் உதவியை நாடி உண்மையான தகவலை பெறலாம். இதற்கு முதலில் தேவையானவை, சரியான பிறப்பு குறிப்புகள் மட்டுமே. அதாவது ஒரு ஆண் / பெண் பிறந்த சரியான நேரம், தேதி, வருடம், மாதம், ஊர் இவை தெரிந்திருந்தால் மட்டுமே இந்த வேதகால ஜோதிட முறையில் (VEDIC ASTROLOGY ) நாம் சரியான முறையில் கணித்துக் கூற முடியும். இது இல்லாதவர்களுக்கு சற்று கடினம் தான். அதற்கு வேறு வழிகள் உள்ளன. அதனை வேறு கட்டுரையில் காணலாம்.

ஒரு ஆணின் ஜாதகத்தைக்கொண்டு, அவனுக்கு ஒரு குழந்தையை உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறதா இல்லையா என்பதனை அறிய பீஜஸ்புடம் எனும் ஒரு ஜோதிடகணக்கு உள்ளது. அதன்படி பார்க்க, ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆத்மா / உயிர் காரகரான சூரியனின்பாகை, புத்திர காரகரான குருவின்பாகை மற்றும் சுக்கிலத்திற்கு காரகரான சுக்கிரனின்பாகை, இவ்வனைத்தையும் கூட்டி அதுஎந்த ராசியில் அமைகிறதோ / விழுகிறதோ அது ஆண் ராசியாகவும், அந்தக் கூட்டிவந்த பாகை நவாம்சத்தில் விழும்ராசியும் ஆண்ராசியாக வந்தால், ஜாதகர் புத்திரப் பேற்றை அளிக்கும் திறனை உள்ளவர் என்றும், அவரால் சாதாரணமாகவே புத்திரபேற்றை அளிக்கும் உயிர்சக்தி கொண்டவர் என்றும் அறியலாம்.

அதுவே கூடி வந்தபாகை, ராசியில் அல்லது நவாம்சத்தில் ஏதேனும் ஒன்றில் பெண்ராசியாக அமைந்து விட்டால், மருத்துவ ரீதியாக மட்டுமே அவரால், புத்திரபேற்றை அளிக்கமுடியும் என்றும் கூறலாம். ராசியும் நவாம்சமும் பெண்ராசியாக அமைந்துவிட்டால், அவரால் புத்திரபேற்றினை அளிக்க இயலாது என்றும் கூறலாம். இவருக்கு கடவுள்தான் துணை.

அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு, குழந்தையை பெற்றுதரும் நிலையில் உள்ளாளா என அறிய ஷேத்திரஸ்புடம் எனும் ஒரு ஜோதிடகணக்கு உள்ளது. அதனை பார்க்க ஒருபெண்ணின் ஜனனகால ஜாதகத்தில் உடல் காரகரான சந்திரனின்பாகை, புத்திர காரகரான குருவின்பாகை மற்றும் பெண்ணுக்கு களத்திர காரகரும், ரத்தம், எலும்பு மஜ்ஜை, வீரிய தன்மை போன்றவற்றின் காரகரான செவ்வாய் இவை அனைத்தையும் கூட்டி வந்தபாகை, எந்தராசியில் அமைகிறதோ / விழுகிறதோ அதுபெண் ராசியாகவும், அந்தக் கூட்டிவந்த பாகை விழும் நவாம்சமும் பெண்ராசியாக வந்தால் அந்தபெண் எளிதாக ஒருகுழந்தையை பெற்றுதரும் பூரணமகள் ஆகிறார். இவளிடம் கருமுட்டை வளர்ச்சி சரியான நிலையில் உள்ளதாக காண முடிகிறது.

இதுவே, கூட்டிவந்த பாகை ஒன்று ஆண் ராசியாகவும் மற்றொன்று பெண் ராசியாகவும் வந்தால், புத்திரஉற்பத்திக்கு உடனடிதீர்வு இல்லை எனவும் தோஷநிவர்த்தி மற்றும் மருத்துவ ரீதியாக தான் , அந்தபெண், குழந்தையை பெற்றுதர இயலும் என கூற முடியும்.

மேற்கண்ட தகவல்களில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், முன்கூட்டியே ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து அதனை சரியாக கண்டு கொண்டால் அதற்கான தீர்வை அடுத்தகட்ட நடவடிக்கைகளான மருத்துவஉதவி பெற்று குழந்தை பாக்கியத்தை பெறமுடியும். இதனை திருமணத்தின் போதே பொருத்தம் பார்க்கும் நிலையிலேயே இந்த விவரங்களை அறிந்து அதற்கேற்ப மருத்துவ உதவிகளை பெற்று அருமையான குழந்தை பாக்கியத்தைபெற இயலும்.

தம்பதியினரிடையே இந்தக் காரணத்திற்காக ஏற்படும் பிரிவினையை தடுக்கலாம். ஏன்எனில் பொதுவாக நாம் பொருத்தம் பார்க்கின்றபோது இரு வீட்டாரின் பொருளாதாரநிலை மற்றும் இருவரின் அழகு, படிப்பு, வேலை, சம்பளம் போன்றவற்றை மட்டுமே பார்த்து முடிவெடுக்கிறோம். இத்துடன் புத்திரபேற்றிற்கான தகுதியையும் முன்னரே அறிந்துகொள்ளும் போது தம்பதியினரிடையே ஆன பிணைப்பு நீண்டகாலத்திற்கு அருமையாக தொடரும்.

பொதுவாகவே குழந்தைக்கான தகவல்களை லக்கினத்திற்கு 5ஆம் பாவத்தை வைத்து புத்திரபாக்கியத்தை அறிந்து கொண்டாலும் ஒருவரின்உண்மை நிலைகளை, அவரின் உடல்கூறு பற்றி, உடல்தரும் உபாதைகளை பற்றி சரியாக அறிந்துகொள்வதற்கு மேற்சொன்ன ஜோதிட கணக்குகளை ஆய்ந்து பலன்பெற வேண்டும்.

“ஜோதிட ரத்னா”
தையூர். சி.வே. லோகநாதன்.
தொடபுக்கு : 98407 17857

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button