நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள்!

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதல், தொடர்பாக காத்தான்குடி பகுதியில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் உட்பட 62பேரும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (05) மட்டக்களப்பு நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் சுமார் 10 மாதத்திற்கு பின்னர் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களை நீதவான் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது, அவர்களை மேலும் இருவாரத்திற்கு தொடர் விளக்கமறியலில் வைக்குமாறு​ நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புபட்டவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிற்கு பயிற்சிக்காக சென்றார்கள் எனும் சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த 63பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஐவர் பிணையிலும், 2பேர் வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையில், 56 பேர் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 56பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின்கணவர், சியோன் தேவாலய தற்கொலைகுண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன்தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம்செய்ய பஸ் வண்டி ஆசனபதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6பேர் உட்பட 62பேரும் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வெவ்வேறு 4வழக்கு இலக்கங்களை கொண்ட 62பேரும் நாட்டில் உள்ள பொலநறுவை, அனுராதபுரம், கேகாலை, திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை கடந்த 2020-10-15ம் திகதி நீதிமன்றிக்கு அழைத்து வரப்பட்ட பின், நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாது காணொளிமூலம் அவர்களின்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், தொடர் விளக்கமறியலில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் 10 மாதத்திற்கு பின் இன்று (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் விசாரணைக்காக 7 பஸ் வண்டிகளில் அழைத்து வரப்பட்டனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்களை பார்வையிட அவர்களது உறவினர்கள் நீதிமன்றின் வெளியே கூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version