இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களை சேகரிக்கவும் மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாட்டுக்கு உரிய நிபுணர்குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்க ஐ.நா பொதுச்சபை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிபுணர் குழு உருவாக்க நகர்வை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு பலமுயற்சிகளை எடுத்தபோதிலும் மேற்குலக நாடுகல் வகுத்த வியூகத்தால் கொழும்பு அதிகாரமையம் கடும் இராஜதந்திர தோல்வியினை சந்தித்துள்ளது.
ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 48ம் கூட்ட தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நிபுணர்கள் குழுவின் உருவாக்கத்திற்கு தேவையான 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கு ஐ.நா பொதுசபை பச்சைகொடி காட்டியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற கடந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய தனியான செயலணி உருவாக்கபடவுள்ளது.
இந்த செயலணிக்கு அனைதுலக குற்ற வியல் சட்டத்தில் அனுபவம்கொண்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் என்பதுடன், அவருக்கு உதவியாக மேலும் இரு சட்ட வல்லுநர்கள் பணி யாற்றுவார்கள்.
இந்த குழுவின் வழி நடத்தலில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் பாதுகாத்தல் குறித்த நகர்வுகளை ஒருங்கிணைக்கவும் திட்டம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.