கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமன்!
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமமென ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் ,
தென்தமிழ் நாட்டின் உயிர்நாடியான முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய பென்னி குவிக் நினைவில்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பல தடைகளுக்கு மத்தியில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லை பெரியாறு அணையை உருவாக்கி, தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த பென்னி குவிக்கின் நினைவு இல்லம் தமிழ்நாட்டு அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை உறுதி படுத்தும் வண்ணம் ‘‘மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சரின் பெயரிலான நூலகம் அமைக்க தேர்வான பொதுப்பணித் துறை கட்டடத்தில் ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை’’ என மாவட்ட கலெக்டர் அறிவித்து இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அவரின் இந்தகூற்று ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய பென்னிகுவிக் நினைவு இல்லம் இன்றளவிலும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனை அழித்து விட்டால், அப்பகுதி மக்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் எனவூம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஆற்றல்மிக்க படைப்புகளால் தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி அவர் ஆற்றியப் பணி பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது.
எனினும் குறிப்பிட்ட காலத்தில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்காததால், இங்கிலாந்து சென்று தன்னுடைய குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தவர் பென்னிகுவிக் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இதன் பயனாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை மற்றும் ராம நாதபுரம் மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது பாசனவசதி பெற்று வருகின்றன. இவரின் தியாகத்தைப் போற்றும் விதத்தில், தேனி மாவட்டம், லோயர் கேம்பில் பென்னிகுவிக் நினைவு மணி மண்டபத்தை அவரது பிறந்தநாளான 15.01.2013 அன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையும், அதே நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி பஸ்நிலையத்திற்கு ‘‘கர்னல்ஜான் பென்னிகுவிக் பஸ்நிலையம்’’ என பெயர் சூட்டப்படும் என அறிவித்ததையும் இங்கே நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இவ்வாறான நிலையில் தமிழக விவசாயிகளுக்காக பாடு பட்டு முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய பென்னி குவிக் நினைவு இல்லத்தை இடித்து விட்டு அங்கு கலைஞரின்பெயரில் நூலகம் அமைப்பது என்றமுடிவு, சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்.
எனவே அந்தமுடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, அ.தி.மு.க. சார்பில் தமிழ் நாடு அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
தென்தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி பென்னி குவிக்நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படு மேயானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என இவர்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.