2020ம் ஆண்டிற்கான சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியீடு செய்வதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய பாடங்களுக்கான செயல்முறை பரீட்சைகளை சரியான நேரத்திலே நடத்த முடியாதுள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரண தர மாணவர்களுக்கான செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
2020ம் வருடத்திற்கான சாதாரணதரப் பரீட்சைகள் கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்த வருடத்தின் மார்ச் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இலங்கையில் கொரோனா 3ஆம் அலை காரணமாக விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளால் சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டது.
பரீட்சை முடிவுகளை வெளியிடுவது குறித்த பணிகள் இடம்பெறுகிற போதிலும் தொற்று நோயுடன் நாட்டின் சூழ்நிலைகள் மாறும்போது சரியான திகதியை வெளியிட முடியாதுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.