இளைஞனை கடத்திய பொலிஸாருக்கு இடமாற்றம்!

கோப்பாய் பகுதியில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திசென்று தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புபட்ட, உபபொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் தலையீடு செய்வதை தவிர்பதற்காகவே, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரது உத்தரவிற்கமைய ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை “ஹைஏஸ்”ரக வானில் பொலிஸ் சீருடை, சிவில் உடையில் வந்த கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை கடத்தி சென்று சித்திரவதை செய்ததோடு, கைதுப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசிவிட்டு சென்றது.

இச்சம்பவத்தில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் இருந்ததாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து யாழ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட உபபொலிஸ் பரிசோதகர் மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாட்சிகளில் தலையீடு செய்வதைத் தடுக்கும் விதத்தில் அவர்கள் ஐவரும் இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணைகளைத் வேகப்படுத்துமாறு யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தவிட்டுள்ளார்.

Exit mobile version