ஒரு மாதத்திற்குள் 17 ஆயிரம் சிறுவர் ஆபாச காணோளிகள் இலங்கையிலிருந்து பதிவேற்றம்!

கடந்த ஜூன் 17 முதல் ஜூலை 28 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இருந்து 17,000 க்கும் அதிகமான சிறுவர் ஆபாச காணோளிகளும், புகைப்படங்களும் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கையில்,

சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தளங்களில் பதிவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்த எச்சரிக்கைகள் மற்றும் தரவுகள், சுயமாகவே சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கண்டறியும் நிலையத்திற்கு கிடைத்துவிடும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 28ம் திகதி வரை சிறுவர்கள் தொடர்பான 17 ஆயிரத்து 629 ஆபாச காணோளிகள் மற்றும் புகைப்படங்கள், இலங்கையில் இருந்து இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட விடயங்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுவொன்று சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த விசேட பொலிஸ் குழுவிற்கு “சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கண்டறியும் நிலையம்” என பெயரிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்கள் குறித்த சட்டவிரோத விடயங்களை இந்த விசேட பொலிஸ் குழு கண்டறியும்.

சிறுவர்களின் ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தளங்களில் பதிவேற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமெனவும், இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பகிர்ந்த அல்லது அனுப்பிய நபர்களையும் பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version