ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த இசாலினிக்கு முன்னர் உயிரிழந்த இரு பெண்கள் குறித்து விரிவான விசாரணையை விசேட பொலிஸ் குழுக்கள் ஆரம்பித்துள்ளது.
குறித்த இருபெண்களில் ஒரு இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மற்றைய பெண் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த இசாலினி யாற்றிய சிறுமி உடலில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது அவருக்கு தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுமி தீயிட்டு தற்கொலை செய்தமைக்கான காரணம் என்ன என்பது தற்போதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசியம் ஏற்பட்டால் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலை மீளஎடுத்து அதனை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரிஷாட் வீட்டில் இறுதியாக உயிரிழந்த சிறுமியின் மாதாந்த சம்பளமானது தரகர் சங்கர் என்பவரே முழுமையாக பெற்றுள்ளார் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஷங்கர் என்பவருக்கு சொந்தமான வங்கி கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாதாந்தம் ரிஷாட்டின் வீட்டில் இருந்து இந்த கணக்கிற்கே பணம் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நடாத்தப்பட்ட விசாரணையின்படி சிறுமியின் தாய் சங்கரிடம் 30ஆயிரம் பணத்தை கடனாக பெற்றுள்ளார். அப்பணத்தை செலுத்த முடியாமல் தனது மகளை பணி பெண்ணாக இரு மாதங்களுக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரே இச்சிறுமியை ரிஷாட் பதியூதினின் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். அது முதல் சிறுமி உயிரிழக்கும் வரை இந்த வீட்டு பணிபெண்ணாக பணியாற்றியுள்ளார்.
இதன்போது கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சில சந்தர்ப்பங்களில் இச்சிறுமி, தும்புக்கட்டை உடையும் வரை தாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக சிங்கள ஊடகமான திவயின தெரிவித்துள்ளது.