பெரும்பான்மை இனத்தவரின் தாக்குதலில் 3000 தமிழர்கள் படுகொலை!

பெளத்த, சிங்களப் பேரினவாதமோ, அந்தப் பேரினவாதக் கொடுங்கோல் ஆட்சியின் ஏவல் கட்டமைப்பாக இயங்கும் பொலிஸ் துறையோ திருந்தப் போவதில்லை என்பது தெளிவு.

கறுப்பு ஜூலை நினைவு கூரலுக்கு எதிராக நீதிமன்றங்கள் மூலம் தடை உத்தரவு பெறும் பொலிஸாரின் “அதிமேதாவித்தனம்’ இதனைத்தான் நிரூபித்து நிற்கின்றது.

அப்பாவித் தமிழர்கள் மீது பெளத்த, சிங்களப் பேரினவாதம் தனது மிலேச்சனமான, கொடூரமான இனவெறியை – காட்டு மிராண்டித்தனத்தை – மனித நாகரிகத்துக்கே இழுக்கான குரூரத்தை – கட்டவிழ்த்து விட்ட மோசமான நிகழ்வே ஆடிக் கலவரம்.

அந்த மோசத்தில் உயிரிழந்த அப்பாவிகளை, தமது உறவுகளை, அந்த மக்கள் நினைவு கூர்வதைத் தடுப்பது, அதுவும் சட்டத்தின் பெயரால் தடுப்பது, அந்தக் குரூர வெறியாட்டத்திலும் விட கேவலமான, மோசமான  செயல்.

பொலிஸ் துறையைக் கையாளும் அமைச்சரின் பெளத்த, சிங்கள வெறிப் போக்கைத் தோலுரித்துக் காட்டும் – அம்மணப்படுத்தி நிற்கும் – கேவலச் செயல்தான் நினைவு கூரலுக்கான இந்தத் தடை உத்தரவு.

கொவிட் தொற்றுத் தொடர்பான மட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை தனது அரசியல் இலாபங்களுக்காகக் கோட்டாபய அரசு பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு – உண்மை நிலைமை பற்றிய விளக்கம் – அண்மைக் காலத்தில் வெளியாகி வந்தது தெரிந்ததே.

அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமல்ல, தனது பேரினவாத வெறிப் போக்கை நிலைநிறுத்தவும், அந்த மட்டுப்படுத்தல்களை அதிகாரத் தரப்பு தவறாகப் பயன்படுத்துகின்றது என்பதற்கு இந்தத் தடை உத்தரவு நல்லதோர் உதாரணம்.

தனது இனவெறித்தனத்தின் விளைவை மூடி மறைக்க பெளத்த. சிங்களப் பேரினவாதம் சட்டத்தையும் நீதியையும் கூட தவறாக வழி நடத்தப் பின் நிற்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

கொந்தளிப்பும் குரூர நிகழ்வுகளும் நிறைந்து விட்ட தமிழர்களின் இனப் போராட்ட வரலாற்றில் வன்முறைப்புயல் மோசமாக வீசிய காலத்தின் ஆரம்பம் 1983 ஆடிக் கலவரம்தான்.

பிரளயம் போன்ற இனக்கலவரம் வெடித்து பல்லாயிரம் தமிழர்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்ட இந்த நிகழ்வை வரலாற்று ஆய்வாளர்கள் “கறுப்பு ஜூலை’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

புலிகள் தாக்குதல்

ஜூலை 23ஆம் திகதி – சரியாக 38 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய திகதியில் – யாழ்ப்பாணம், திருநெல்வேலிக்கு அருகே இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர்.

அதற்குப் பழிவாங்குவதற்காக நாடு முழுவதிலும் பல்லாயிரம் தமிழர்களைப் பலி வாங்கியது பேரினவாத வெறித்தனம். திடீரென எழுந்த பழிவாங்கும் உணர்ச்சியாக இந்தக் கலவரம் கட்டவிழவில்லை.

மாறாக, இனப்படுகொலை – இனவழிப்பு- என விவரிக்கும் அளவுக்கு, அரசின் பின்புலத்தில் திட்டமிட்டு வகுக்கப்பட்ட – தருணம் பார்த்து நடத்தப்பட்ட – கொடூரத் தாக்குதலாக இந்த வெறியாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இனவழிப்பு நடவடிக்கையில் நாடு முழுவதும் மூவாயிரம் தமிழர்கள் காட்டு மிராண்டித் தனமாகப் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பாலான தமிழர்கள் சிங்களக் காடையர் கும்பல்களினால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.அல்லது அடித்தே படுகொலை செய்யப்பட்டனர்.

பல குடும்பங்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கடைகள், கட்டங்கள், கைத்தொழில் வளாகங்கள், சினிமாத் தியேட்டர்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங்கள் இரவோடு இரவாக எரித்துத் தரை மட்டமாக்கப்பட்டன.

கலைக்கப்பட்ட தமிழர்கள்

தலைநகர் கொழும்பில் மட்டும் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இரவோடு இரவாக வீடுவாசல்கள், சொத்துக்களை இழந்து ஏதிலிகளாயினர். கப்பல்களில் அவர்கள் அகதிகளாக வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நன்கு திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை புத்தரின் பெயரால் மதத்தை அனுஷ்டிக்கின்றவர்கள் என்று கூறும் பேரினவாதிகளே முன்னெடுத்தனர்.

அவ்வளவு கொடூரத்தையும் புரிந்து விட்டு, அந்தக் கொடூரத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கூர்வதற்கும் தடை விதிப்பது, பேரினவாதிகள் வணங்கும் புத்தனுக்கும் கூட அடுக்காது.

பஞ்ச சீலத்தை வலியுறுத்தியவரின் பெயரால் இந்தக் கொடூரத்தைத் தொடர்வது சிங்கள இனத்துக்கே வெட்கம். பெருவெட்கம்.

Exit mobile version