பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 15வயது சிறுமி உயிரிழந்த விடயத்தில், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையால் தற்கொலை செய்திருக்கலாமா எனும் கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு சிறுமியின் பிரேத பரிசோதனையில், சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது குறித்த சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ரிஷாத் பதியுதீனின் மனைவியுடமும், அவரது பெற்றோரிடமும் மற்றும் அந்த வீட்டில் பணியாற்றும் ஒரு இளைஞனிடமும் பொரளை பொலிசார் நீண்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது சிஐடியின் காவலில் இருக்கும் ரிஷாத் பதியுதீனும் விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டயகம மேற்கை சேர்ந்த சிறுமி 15 வயதில் பணி பெண்ணாக ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிப்பெண், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிசார் தெரிவித்தனர். டயகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்துள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை 3ம்திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவரது உடலில் 72% தீக்காயம் ஏற்பட்டிருந்தது.
ஜீலை 3ம் திகதியில் இருந்து ஜீலை 15வரை சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி ஜீலை 15 அன்று உயிரிழந்திருந்தார்.
உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்யும் அளவிற்கு ஏதேனும் தீவிரமான காரணங்கள் இருக்க வேண்டும் எனவும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை தாம் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறப்பதற்கு முன்னர், சிறுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தேசிய மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்த போதிலும் எதற்காக தீ வைதுது கொண்டேன் என்பதை அச்சிறுமி சொல்லவில்லை.