இணையத்தளத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக, 15 வயதான சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
நேற்றுவரையிலும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும் பொலிஸ் அதிகாரியொருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அச்சிறுமியைக் கொள்வனவு செய்து, பாலியல் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வங்கியின் முன்னாள் முகாமையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் பிரியந்த லியனகே அவ்விருவரையும், ஜூலை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.