ஏப்ரம் 21 தாக்குதல்! அவுஸ்திரேலியாவில் ஒருவர் கைது!

ஏப்ரல் குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இன்னொறு சூத்திரதாரி அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசித்து வரும் அஹமட் லுக்மான் தாலீப் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மெல்பேர்னில் மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்ட தாலீப், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தாலப்பின் மாணிக்கக்கல் வியாபாரத்தின் ஊடாக கிடைக்கும் வருமானம் அல் கய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா திறைசேரி தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டில் தாலீப் ஆயுதங்களை காஸாவிற்கு எடுத்துச் சென்ற போது இஸ்ரேல் கமான்டோ படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடயங்கள் எதுவுமே இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிந்திருக்கவில்லை என சிங்கள பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. தாலீப்பின் தந்தையான பேராசிரியர் தாலிப் என்பவரை கட்டாரிலிருந்து அவுஸ்திரலியாவிற்கு நாடு கடத்தியதாகவும், ஐ.எஸ் இயக்கத்திற்கு உதவிய காரணத்தினால் இவ்வாறு நாடு கடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லுக்மான் என்னும் பேராசிரியர் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார் என தென்னிலங்கை நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த இருவரும் எவ்வாறு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது பற்றிய எந்தவொரு விபரங்களையும் நாளிதழ் வெளியிட்டிருக்கவில்லை.

இதேவேளை இக்கைது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version