அரசாங்கமானது வாக்குகளைப் பெறுவதற்கு மக்களை ஏமாற்றியது போன்று கொரோனா வைரஸை ஏமாற்ற முடியாதென்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
“70% மக்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு குறைந்தது 140 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. இரு தடவைகள் தடுப்பூசி செலுத்துவதற்கு 280 இலட்சம் ரூபா செலவாகும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை அரசாங்கத்திடம் தேசிய தடுப்பூசிச் செலுத்தல் தொடர்பான செயற்றிட்டம் வழங்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும்போது சுகாதாரப்பிரிவிற்கு முன்னுரிமை வழங்கவிடுமெனவும், அதற்கடுத்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, அதிகமான தடுப்பூசிகள் முறையாக பெறப்படும்போது, அவை சமூகத்திடம் பரந்தளவில் கொண்டுசெல்லப்படும். ஆனால், அரசாங்க பிரமுகர்கள் தமது சுற்றத்திற்கு தடுப்பூசிகளை ஒதுக்கிக்கொண்டுள்ளார்கள்.
மொட்டு கட்சி அலுவலகத்தில் அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இன்று அரசாங்கம் தடுப்பூசி அரசியலைச் செய்கிறது.” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
“கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் போடப்பட்டுள்ள பயணத்தடையினால் நாட்சம்பளத்திற்கு வேலைசெய்யும் பலருக்கு வருமானம் இல்லாதுபோயுள்ளது. விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான ஒழுங்கான திட்டமொன்றில்லை.
அதேபோல், மக்களினது உணவு மற்றும் ஒளடத தேவைகளை பூரித்து செய்துகொள்வதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அழுத்தம் வேறு விதத்தில் வெடிக்கும்.
கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக பொலிஸ் தடைகளை மீறியதைக் கண்டோம். நாட்டு மக்களின் தேவைகளுக்காக காய்கறி மற்றும் மீன் போன்ற பொருட்களை வாங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் முறையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
எம்மிடம் மிகவும் முறையான அரசு இயந்திரங்கள் உள்ளன. மேலும், இந்த பொறிமுறையில் தனியார் துறையையும் ஒரு பங்காளியாக்க வேண்டும். இதன்மூலம் சிக்கல்களின் அபாயத்தை குறைக்க முடியும்.” என்று தெரிவித்தார்.