சுவாமி விவேகானந்தர்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! சுவாமி விவேகானந்தர் தெரிவித்தவை!

69. கடவுள் ஒவ்வோர் உயிரிலும் குடிகொண் டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை–இந்த உண்மையை எவ் வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

70. ஆண்டவனைத் தேடி நீங்கள் எங்கே போகிறீர்கள்? துன்பப்படுபவர்கள், ஏழைகள், பலவீனர்கள் இவர்கள் எல்லோரும் அத்தனை தெய்வ வடிவங்களே அல்லவா? ஏன் முதலில் இவர்களை ஆராதிக்கக்கூடாது? கங்கைக் கரை யில் கிணறு வெட்டப் போவது உண்டா? இந்த ஏழைகளையே உங்கள் கடவுளாகக் கொள் ளுங்கள். அவர்களைப்பற்றிச் சிந்தியுங்கள்; அவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள்; அவர் களுக்காக இடைவிடாமல் பிரார்த்தனை செய் யுங்கள். அப்போது ஆண்டவன் உங்களுக்கு வழி காட்டுவார்.

71. எல்லாவற்றிலும் முதற் பங்கு ஏழை எளியவர்களுக்குத்தான் தரப்படவேண்டும்; அவ்விதம் தந்தது போக எஞ்சியிருப்பதைப் பெறவே நமக்கு உரிமை உண்டு.
முதலில் நம்மைச் சுற்றியிருப்பவர்களைத் தெய்வமாக நினைத்து வழிபடுங்கள். இந்த விராட் புருஷனைப் பூஜியுங்கள். உலகில் வாழும் மக்களும் மற்ற உயிர்களும்தான் நமது தெய்வங்கள்; முக்கியமாக, நமது பாரததேச மக்களே நமது முதல் வழிபாட்டிற்கு உரிய தெய்வங்கள் ஆவர்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தெய்வ மாக நினைத்துத் தொண்டாற்றுவதே நாம் செய்ய வேண்டிய வழிபாடாகும்.

72. பிறர்பொருட்டு இந்த ஒரு பிறவியை யாவது நீங்கள் தியாகம் செய்யக்கூடாதா? வேதாந்தம் படிப்பது, தியானம் செய்வது முதலிய காரியங்களை அடுத்த ஜன்மத்துக்கு
வைத்துக்கொள்வோம். பிறருக்குச் சேவை புரிவதிலேயே இந்த உடல் போகட்டுமே.

73. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான்.
நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண் டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்துகொள்கிறோம்.
உயர்ந்த பீடத்தில் நின்று உன் கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ‘ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள்’ என்று நீ சொல்லாதே. மாறாக, அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து அந்த ஏழை அங்கே இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மை யையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப் பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.

74. பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது மனதின் கோணல்களைத் திருத்துகிறது.

75. சுய நலமா இல்லையா என்பதை உனது மனச்சாட்சியையே முதலில் கேட்டு நீ தெரிந்து கொள். சுயநலம் என்பது இல்லையானால், பிறகு எதையும் நீ பொருட்படுத்த வேண்டாம். எதுவும் உன்னைத் தடை செய்ய முடியாது. செயலில் இறங்கு; அருகில் இருக்கும் செயலைச் செய்யத் தொடங்கு. அவ்விதம் செய்யச் செய்ய உண்மை உனக்கு எளிதில் புலப்படும்.

76. இதயபூர்வமாகக் காரியங்களைச் செய் பவனுக்கு இறைவனும் உதவிபுரிகிறான். உன் னால் இயன்றவரையில் நற்செயல்களைச் செய்.

77. உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைக்காட்டிலும் சிறந்த அறம் வேறு இல்லை. உண்மையோடு ஒருவன் இந்த ஓர் அறத்தைக் கடைப்பிடிப்பானானால் அவன் முக்தி பெறுவது நிச்சயம்.

78. திக்கற்றவர், ஏழை எளியவர், கல்வி அறிவு இல்லாத விவசாயிகள், தொழிலாளர் ஆகியோ ருக்குச் சேவை செய்வதே நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகும். முதலில் இவர்களுக்குத் தொண்டு செய்தபின், நேரம் இருக்குமானால் உயர்குல மக்களுக்குத் தொண்டு செய்வோம்.

79. எனது நாட்டில் ஒரு நாய் உணவில்லாமல் இருந்தாலும் அதற்கு உணவிடுவதே என்மதமாகும்.

80. எழுந்திருங்கள்! ஆண்மையுடன் பிறருக் குத் தொண்டு புரிவதில் ஈடுபடுங்கள்.

81. என் மகனே! உனக்கு எனது சொற்களின் பேரில் ஏதாவது மரியாதை இருக்குமானால், முதலாவதாக உன்னுடைய அறையின் எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிடு. இதுவே நான் உனக்குத் தரும் முதல் அறிவுரை யாகும். கீழ்நோக்கிச் சென்றபடியும் துன்பத்தில் மூழ்கியபடியும் ஏராளமான ஏழைமக்கள் நீ வாழும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். நீ அவர்களை அணுகிச் சென்று உன் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் செலுத்தி அவர் களுக்குத் தொண்டு செய். நோய்வாய்ப்பட்ட வர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வழங்க ஏற்பாடு செய். உன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி, அந்த நோயாளி களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. என் மகனே! நான் உனக்குச் சொல்கிறேன் இந்த முறையில் உன்னுடைய சகோதரர் களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால், நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

82. கிராமம் கிராமமாக, ஊர் ஊராக, நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களைப் பார்த்து, ‘சோம்பலை ஒழித்து எழுந்திருங்கள்!’ என்று சொல்லுங்கள்; சோம்பி யிருப்பதனால் பயனில்லை ; அவர்களுடைய உண்மையான நிலை இன்னதுதான் என்பதை அவர்களுக்குப் புரியும்படி செய்து. ‘சகோதரர் களே! எழுந்திருங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்; இன்னும் எவ்வளவு காலத்திற்கு அறியாமை என்ற தூக்கத்திலேயே ஆழ்ந்திருக்கப்போகிறீர் கள்?’ என்று சொல்லுங்கள். அவர்கள் தங்கள் நிலைமையைத் தாங்களே சீர்படுத்தி எவ்வாறு உயர்வு பெற முடியும் என்பதை அவர்கள் அறியும்படி விளக்கிக் கூறுங்கள். நீங்கள் உடனடியாக இப்போது செய்ய வேண்டிய முதல் வேலை இதுதான். அத்துடன், நமது சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும் மகத்தான உண்மைகளையும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் மிகவும் எளிய நடை யில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்; அந்த மேலான உண்மைகளை அவர்களுக்குப் புரியும்படி செய்யுங்கள்.
83. அறிவுள்ளவர்கள் அறிவற்றவர்களிடம் பரிவு காட்ட வேண்டும். அறிந்தவன் ஓர் எறும்புக்காகக்கூடத் தன் உடலையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பான். ஏனெனில், உடல் அழியக்கூடியது என்பது அவனுக்குத்
தெரியும்.

84. அமைதிக்காக உழைத்து அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.

85. பிறருக்கென்று வாழ்பவர்களே வாழ் பவர்கள்; மற்றவர்கள் நடைப்பிணத்துக்குச் சமமானவர்களே.

86. உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதே நேரத்தில் பிறருக்காகப் பாடுபடவும் அதன் பொருட்டு நீங்கள் மரணத்தை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்பேன். நீங்கள் அப்படி உலக நன்மைக்காக இறந்து போவதையே நான்
பெரிதும் விரும்புகிறேன்.

87. என் அருமை மாணவர்களே! நான் கூறும் அறிவுரையை ஏற்பீர்களாக! கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மக்கள் தொண்டில் உங்களை முழு மையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். விலை மதிப்பற்ற, செல்வம் நிறைந்த பொக்கிஷமே கிடைத்தாலும் இந்தத் தொண்டினால் கிடைக் கும் ஆனந்தத்திற்கு ஈடு இணை இல்லை என்பேன்.
88. அதிகாரம், பதவி போன்றவை தாமா கவே தேடி வரும். நீங்கள் உழைப்பைப் பயன் படுத்துங்கள். அப்போது தாங்க முடியாத அள விற்கு உங்களிடம் ஆற்றல் பெருகி வருவதைக் காண்பீர்கள். பிறருக்குச் செய்யும் அற்பச் சேவை கூட உங்களிடம் பேராற்றலை விழிப்புறச் செய்யும். அதன் மூலம் நாளடைவில் உங்கள் மனம் சிங்கத்தை ஒத்த ஆற்றலைப் பெற்று விடும்.

89. அல்லும் பகலும் பிறருக்காக நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தி உழைப்பீர்களா னால், இந்த வாழ்க்கையில் உங்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை .

90. என் மகனே! மரணம் நேருவதைத் தடுப் பதற்கில்லை என்றால் கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதை விட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? நிலையில்லாத இந்த உலகிலே இரண்டொரு நாள் அதிகமாகவே வாழ்ந்து விடுவதனால் பெறப் போகிற பயன் என்ன? வாழ்க்கை என்ற கத்தி துருப் பிடித்து அழிந்து போவதைவிடத் தேய்ந்து அழிவதே மேலானது. அதிலும் குறிப்பாக, மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவிற்கு நன்மை செய்வதற்காக அழிந்து போவது மிகவும் நல்லது.

91. எவ்வளவு காலம் உடல் இருக்கிறதோ அவ்வளவு காலம் ஏதாவது ஒரு வேலையைச் செய்வது என்பது தவிர்க்க முடியாதது. எனவே மற்றவர்களுக்கு எந்த வேலைகள் நன்மை தருமோ அவற்றைச் செய்ய வேண்டும்.

92. நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும், சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி; உன் சுக துக்கங்களை மறந்து பிறர் நலன்பொருட்டு வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

93. நாகரிகம் அனைத்துக்கும் சுயநலத் தியாகமே அடிப்படையாக விளங்குகிறது.

94. மணிக்கணக்கில் நிறையப் பேசுவதைக் காட்டிலும், குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது.

95. மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன்.

96. உன்னைத் தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்.

97. உலகத்தில், கொடுப்பவனின் நிலையி லேயே நீ எப்போதும் நில். ஒவ்வொன்றையும் கொடுத்து விடு; பிரதிபலனாக ஒன்றையும் எதிர்பார்க்காதே. அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு. உன்னால் இயன்ற அளவு சிறிதாவது கொடு. ஆனால் அதன் பொருட்டு விலை பேசுவதை ஒழித்து விடு. நிபந்தனைகளை ஏற்படுத்தாதே. நம்மீது நிபந்தனை ஏதும் சுமத்தாமல், இறைவன் நமக்குக் கொடுப்பதைப் போல, நமது தாராள குணத்தால் நாமும் கொடுப்போமாக.
தன்னுடைய சொந்த சுகவசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத் தில்கூட இடம் கிடைக்காது.
மக்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தமது சொந்த சுக துக்கங்களையும் புகழையும் எல்லாவகை ஆசைகளையும் மூட்டைகட்டிக் கடலில் எறிந்துவிட்டுப் பின்பு இறைவனிடம் வர வேண்டும். மகான்கள் அனைவரும் சொன்னதும் செய்ததும் இதுவே.

99. உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக் கம். நமது பெயர்களைப் பறை சாற்றுவதல்ல.

100. உங்கள் சகோதரர்களுக்குத் தலைமை வகிக்க முயல வேண்டாம். அவர்களுக்கு ஊழி யமே செய்யுங்கள். தலைமை வகிக்கும் பைத் தியம், வாழ்க்கை என்ற கடலில் எத்தனையோ பெரிய கப்பல்களையெல்லாம் மூழ்க அடித்து விட்டது. மரணம் நேரினும் சுயநலம் கருத வேண்டாம். தொண்டை மறக்க வேண்டாம்.

101. அனைவரையும் சரிசமமாகக் கருதுவீர் களாக! உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறு பாட்டுணர்வாகிய பாவத்தை உங்களிடமிருந்து கழுவித் தூய்மை பெறுங்கள். நாம் அனை வரும் சரிநிகர் சமமானவர்கள். நான் நல்லவன், நீ தீயவன், எனவே உன்னைத் திருத்த நான் முயல்வேன் என்ற எண்ணம் சிறிதும் வேண்டாம். ஏனெனில் நம் எண்ணமேரும் உருவாக்குகிறது. என்றும் நிலைத்திருக்க நியதி தன்னலத் தியாகமே சுயநலம் அல்ல.

102. செய்யும் வேலை கடுமையானது என்பவர் இங்கே வர வேண்டாம். இறைவனின் திருவருளால் அனைத்தும் எளிதாகும். உமது பணி ஏழைகளுக்கும் நலிவுற்றவர்களுக்கும் பணி செய்து கிடப்பதே. ஜாதி நிற வேறு பாடின்றிப் பணி புரிவீர்களாக! பலனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். என் கடமை பணி செய்வதே. பிறகு எல்லாம் தாமாக வந்து சேரும். நான் செய்யும் பணி ஆக்க வேலையே யன்றி அழிவு வேலை அல்ல.

103. இளைஞர்களே! ஏழைகள், அறியாமை மிக்கவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோ ருடைய நலனுக்காகப் போராடும் என் இரக்கத் தையும் முயற்சியையும் உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். நாள்தோறும் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த முப்பது கோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்ப தாகச் சபதம் மேற்கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button