தமிழகம் தமது பணிகளை முன்னின்று நடத்த வேண்டும் என்ற அவா உடையவர் விவேகானந்தர். எனவேதான் அவர் தமிழ் நாட்டிற்கு எழுதிய கடிதங்களில் தமது உணர்ச்சி களைக் கொட்டி எழுதினார். அவற்றில் சில பகுதிகள் வருமாறு:
சென்னையைப்பற்றி எனக்கு எப்போதுமே மிகப் பெரிய நம்பிக்கை. இந்தியாவையே மூழ் கடிக்க இருக்கிற மிகப் பெரியதோர் ஆன்மிகப் பேரலை சென்னையிலிருந்தே கிளம்பி வரப் போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது.
சுயநலமற்ற, முழு ஆற்றலையும் கொண்டு பணி புரியவல்ல- உயிர் போகும் வரையிலும் பாடுபடத் தயாராக இருக்கும் எத்தனை பேரைத் தந்துதவச் சென்னை ஆயத்தமாக இருக்கிறது?
கல்கத்தாவிலே ஆயிரக்கணக்கானவர்கள் நமது இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். என்றாலும், நான் அவர்களிடம் வைப்பதைவிடச் சென்னை மக்களாகிய உங்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புவீர்களாக.
இறைவன் நமது சார்பில் இருக்கிறான் என்பதை அறியுங்கள். எனவே, தைரியமுள்ள இளைஞர்களே! முன்னேறிச் செல்வீர்களாக!
எனது வீர இளைஞர்களே! உத்தம குணம் வாய்ந்த நல்லோர்களே! செயல், செயல் புரியத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். பெயருக்காகவோ புகழுக்காகவோ அவை போன்ற பொருளற்ற வேறு எந்த அற்ப விஷயத்திற்காகவோ திரும்பிப் பார்க்க நில்லாதீர்கள்!
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்து விட்டு வேலை செய் யுங்கள். உங்கள் அனைவரின் மீதும் ஆண்ட வனின் ஆசிகள் பொழியுமாக!
நெருப்புச் சுவாலை போன்றிருக்கும் இளைஞர் குழு ஒன்றிற்குப் பயிற்சி தந்து, அதனைத் தயார்ப்படுத்துங்கள். உங்களிடம் இருக்கும் ஊக்கத் தீயை அவர்களிடம் செலுத்துங்கள்.
சென்னைவாசிகளான உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். சென்னை மக்கள் என் தகுதிக்கெல்லாம் மீறிய வகையில், தங்கள் சக்திக்கெல்லாம் அதிகமான அளவில் எனக்கு உதவி புரிந்திருக்கிறார்கள்.
சென்னை இளைஞர்களுக்கு என்றென்றும் எனது நன்றி. கடவுள் அவர்களை எப்போதும்
காப்பாராக. நான் எப்போதும் சென்னை அன்பர்களுடைய நலனுக்காக ஆண்டவனை வேண்டுகிறேன். சென்னை வாழ் மக்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசி.
எனது இளைஞர்களே! வேலையைச் செய்யத் தொடங்குங்கள். அதற்கான வேகத் தீ உங்களை வந்தடையும். வாழ்நாள் குறுகிய அளவானது. பெருங்காரியம் ஒன்றின் பொருட்டு அதைத் தியாகம் செய்துவிடுவீர் களாக! பணி புரிவீர்களாக! பணி புரிவீர்களாக!
தைரியம் மிக்க என் இளைஞர்களே! நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிப் பதற்காகப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள். தைரியம் மிக்க, சுயநலமற்ற என் குழந்தை களே! நீங்கள் அனைவரும் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறீர்கள். நான் உங்களைப் பற்றி மிகுந்த பெருமை கொள்கிறேன். சென்னையிலுள்ள என் நண்பர்கள் அனை வருக்கும் நான் எவ்வளவு கடமைப்பட்டிருக் கிறேன் என்பதைச் சொல்லவே முடியாது.
நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்! என் நம்பிக்கை எல்லாம் சென்னையிடமே இருக்கிறது. தங்கள் பணியைச் செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிக்க வேண்டியது அவசியமானால்.
அப்படியே செய்வதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் உண்மையில் என் குழந்தைகளா னால், எதற்குமே அஞ்சமாட்டீர்கள். சிங்கங் களாகத் திகழ்வீர்கள். இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச்செய்ய வேண்டும். கோழைத்தனம் கூடவே கூடாது.
உயிரே போவதானாலும் நேர்மையுடன் இருப்பீர்களாக:
நெருப்புப் பிழம்பு போன்ற இலட்சியப் பணியாளர்களின் குழு ஒன்று இப்போது எனக்குத் தேவை.
சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியாவெங்கும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்தை மேற்கொண்டு நீங்கள் உழைத்து வர வேண்டும்.
அறிவாற்றல் பொருந்திய தூய்மை மிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன்வாருங்கள். இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்.
சென்னை எப்போது விழித்தெழும் என் றால், அதன் கல்வி பயின்ற இளைஞர்களின் உருவத்தில், அதன் இரத்தமே போன்றவர் களுள் குறைந்தது நூறு பேர் உலகத்திலிருந்து தனித்து நின்றவர்களாய்ச் சத்தியப் போரை நடத்துவதற்கு எப்போது தயாராக இருப்பார் களோ அப்போதே சென்னை விழித்தெழும்.