நாம் அனைவரும் வாழ்வின் வெற்றிப்படிகளில் விரைவாக முன்னேறி உயர்வடைய வேண்டும் என விரும்புகிறோம். உலகில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் சரித்திரங்களைப் பார்க்கும் போது ஒரு மாபெரும் உண்மை புலப்படுகிறது.
உயர்ந்த நிலையை எட்டிப் பிடித்தவர்களுள் பெரும்பாலானவர்கள் மிகவும் சாதாரண நிலையிலிருந்து சுய முன்னேற்றம் அடைந்தவர் களே யாவர்.
சுய முன்னேற்றம் பெறவேண்டும் என்ற திடமான எண்ணமே அவர்களது வெற்றியின் இரகசியமாகும். அந்த எண்ணமே சுய முன்னேற்றப் பயிற்சி பெறத் தூண்டு கோலாக அமைந்தது.
அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது. அவர்கள் நினைத்ததை முடித்துக் காட்டும் திறமையை அளித்தது.
நம் அனைவருக்கும் திறமை உள்ளது. வாழ்வில் முன்னேற்றம் காண ஏராளனமான வாய்ப்புகள் உள்ளன. அவைகளை அறிந்து கொண்டால் நாமும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
சுய முன்னேற்றம் பெறுவது மிகவும் எளிதானது. அதற்குப் பயிற்சி பெற்றுக் கொள்ளவேண்டும்.
முதலில் நம்மால் சுய முன்னேற்றம் பெற இயலும் என்ற திடமான எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே பயிற்சி பெற்றுக் கொள்ளும் ஆவலைத் துரிதமாக்கிவிடும்.
நாம் வெற்றிப்படிகளில் விரைந்து ஏறிச்செல்ல நம்மைத் தயாராக்கிக் கொள்ளத் துவங்கிவிடுவோம்.
- நம்மை முழுமையாக அறிந்து கொள்ள ஒரு சுய ஆராய்வு மேற்கொள்ள வேண்டும்.
- நமது உடல் ஆரோக்கியத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
- நமது குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- நமது தோற்றத்தைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள வேண்டும்.
- நமது மனப்பான்மைகளைத் தெளிவாக உணரவேண்டும்.
- நமது கருத்துகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
- நமது ஆவல்களையும் விருப்பங்களையும் விவரமாக அறிந்து கொள்ள வேண்டும்.
- நமது திறமைகளைக் கண்டறிய வேண்டும்.
- நமது சமுதாய உறவுகளை அறிந்து கொள்ள வேண்டும்.
- தனிப்பட்ட நடத்தை முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- வாழ்வின் குறிக்கோளை அறிந்து கொள்ள வேண்டும்.
- குறிக்கோளைத் திட்டமிட வேண்டும்.
- வாழ்வின் வெற்றி வாய்ப்புகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
- வாழ்வின் குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும்.
- குறிக்கோளை அடையத் தேவையான நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
- நேரத்தைச் சிறந்த முறையில் நிர்வாகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- வாழ்வின் தோன்றும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் வழிகளை அறிய வேண்டும்.
- திட்டங்களைச் செயல் நடவடிக்கைகளாக மாற்றிப் பணி புரிய வேண்டும்.
- நமது செயல்களைக் கால இடைவெளிகளில் தணிக்கை புரிய வேண்டும்.
மேற் கூறியவைகளின் அடிப்படையில் பயிற்சி பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.
பின்வரும் பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை எளிதில் பயிற்சி பெற்றுக்கொள்ள உதவி புரியும்.
பட்டியல்களாகவும் வினாக்களாகவும் எளிமையாக்க பட்டுள்ளதால் சிறிது முயற்சித்தால் விரைவில் பயிற்சி பெற்றுவிட முடியும்.
ஒவ்வொரு பயிற்சியின் முடிவில் விடைகளும் விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. நமது விடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது குறைகளை விலக்கிக் கொள்ள உதவியளிக்கும்.
நம்மை உயர்த்திக் கொள்ள இயலும். ஒவ்வொரு பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும்.
ஒரு பயிற்சியை முடித்தவுடன், அடுத்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு கால வரையறை கிடையாது. தொடர்ந்து முயற்சி மட்டுமே அவசியமாகும்.
நாம் மனது வைத்தால் ஒரு சில நாட்களில் பயிற்சி பெற்று முன்னேறத் துவங்கி விடலாம். சரியான முடிவு எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.