ஒருவர் நேரிய வழியில் வாழ்வதற்கு சாதனமாக அமைவது யாது?
இறையுணர்வு, மனவலிமை
இறையுணர்வு ஏற்படுத்துவதற்கு சாதனமாக அமைவது எது?
விரதங்கள்
விரதங்களுக்கு வழங்கப்படும் மறுபெயர்கள் எவை?
நோன்பு,உபவாசம்
எம்மை ஆன்மீக வாழ்விற்கு இட்டுச் செல்லும் படிமுறைகள் எவை?
நமக்கு உரியன எனக் கருதும் எல்லாவற்றையும் இறைவனுடையவை என எண்ணுவது. எல்லாம் இறைவனுக்கே என அர்ப்பணம் செய்வதும் ஆன்மீக வாழ்விற்கு இட்டுச் செல்லும்.
விரதம் பற்றி ஆறுமுகநாவலர் கூறியது யாது?
விரதமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலாகும்.
விரதங்களை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும்?
விரத தினங்களில் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
நீராடி, தோய்த்துலர்ந்த ஆடை அணிதல் வேண்டும்.
பசியைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
இறைவனோடு ஒன்றித்து இருக்க வேண்டும்.
விரத முடிவில் தூய்மையான பாத்திரங்களில் உணவு சமைத்து, இறைவனுக்கு நிவேதனமாக்கி உறவினருடன் சேர்ந்து உண்ண வேண்டும்.
விரதங்களை பாரம்பரியமாக மேற்கொள்வதனால் ஏற்படும் நன்மை யாது?
அகத்தூய்மையினையும், புறத்தூய்மையினையும் வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைகின்றது. மற்றவர்களுக்கு உதவும் பண்பையும் வளர்க்கிறது.
விரதங்களின் பொதுவான விதிமுறைகள் எவை?
அதிகாலையில் துயில் எழும்புதல், நீராடுதல், தோய்த்துலர்ந்த ஆடை அணிதல், இறைவழிபாடு செய்தல், ஆலயங்களில் இறைதரிசனம் செய்தல், தோத்திரங்களை ஓதுதல், உணவைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல், மனக்கட்டுப்பாடு பேணுதல்.
உபவாசம் என்பதன் பொருள் யாது?
உபவாசம் என்பது இறைவனின் அருகில் வசித்தல் என்னும் பொருள் தருகிறது.
உபவாசம் என்றால் என்ன?
உணவு வகைகளை விடுத்து, விழித்திருந்து இறை தியானத்தில் லயிக்கும் தீவிர நியமத்தை உபவாசம் எனப்படுகிறது.
உபவாசத்தின் மறுநாள் நடைபெறுவது யாது?
உபவாசத்தின் மறுநாள் விரதத்தை முடித்து வைக்கும் பாரணை இடம்பெறுகிறது. இதில் அடியார்களுடன் உணவு உண்ணுதல் வழக்கமாகும்.
விரதத்தின் பயன்கள் எவை?
விரதத்தை அனுஷ்டிப்பதனால் வாழ்வில் தன்னம்பிக்கை, பணிவு, பக்தி, அன்பு, தியாகம், சகிப்புத்தன்மை போன்ற ஆன்மீக மேம்பாடுகளுடன் ஒழுக்கம், நேர்மை போன்ற நற்குணங்களும் ஏற்படுகின்றது.
விரதங்களின் வகைகள் எவை?
கடவுளுக்குரிய விரதங்கள்
பிதிர்களுக்குரிய விரதங்கள்
கடவுளுக்குரிய விரதங்கள் சில தருக.
பங்குனி உத்தரம்
வைகாசி விசாகம்
ஆனி உத்தரம்
பங்குனி உத்தரம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?
பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரத்தில் பூரணையில் அனுஷ்டிக்கப்படுகிறது.
நட்சத்திரங்களின் வரிசையில் பன்னிரண்டாவதாக அமைவது எது?
உத்தர நட்சத்திரம்
சிவபெருமான் இமய மலையிலே பார்வதியைத் திருமணம் செய்துகொண்ட நாள் எது?
பங்குனி உத்தர நட்சத்திர நாள்
பங்குனி உத்தரத்தின் தத்துவம் யாது?
சிவமும் சக்தியும் எப்போதும் இணைந்துள்ளமை.
உலக இயக்கம்
சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தமை உலகின் துன்பம் அகன்று இன்பம் செழிப்பதைக் குறிக்கிறது. மேலும் பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதான ஓர் உயர்நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பங்குனி உத்தரத்தின் சிறப்பு யாது?
இந்த நாளில் நாள், கோள், முகூர்த்தம் பார்க்காது திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது. மேலும் உலக வாழ்க்கையின் விருத்திக்கும் இந்த நாள் சிறப்பாக அமைகின்றது.
சிவசக்தி சங்கமம் எதனைக் குறிக்கின்றது?
ஆன்ம ஈடேற்றத்தைக் குறிக்கின்றது.
பங்குனி உத்தர விரதத்தை எவ்வாறு நோற்க முடியும்?
இரவில் பாலும் பழமும் உண்பது நியதியாக உள்ளது. இயலாதவர்கள் நண்பகல் ஒரு பொழுது உணவு உண்ணலாம்.
இலங்கையிலுள்ள தலங்களில் பங்குனி உத்தரம் எங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?
திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், பொன்னம்பலவாணேச்சரம்
வைகாசி விசாகம் எப்போது வருகிறது?
.வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் பூரணையும் கூடுவதால் வைகாசி விசாகம் தோன்றுகிறது.
விசாக நாளின் சிறப்புகள் எவை?
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமான் தோன்றிய நாள் விசாக நாள். முருக வழிபாட்டிற்குச் சிறந்த நாள்
முருகன் விசாக நாளில் பிறந்தமையினால் ஏற்பட்ட பெயர் யாது?
விசாகன்
புத்தபெருமானின் வைகாசி விசாக சிறப்பு யாது?
புத்தபெருமான் வைகாசி விசாக நட்சத்திரத்தன்றே பிறந்ததும், ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் இத்தினத்திலே ஆகும்.
வைகாசி விசாகத்தின் பயன் யாது?
சைவக்கோயில்களில் விழா நடைபெறும்.
கிராமக் கோயில்களில் கூழ், கஞ்சி, ஊற்றலும், தானங்களும் இடம்பெறும்.
வைகாசி விசாகத்தன்று தானம் செய்வதன் நோக்கம் யாது?
பிறர் வாழ நாம் வாழலாம் என்பதாகும்.
வைகாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் எவை?
வைகாசி ஸ்தானம்
வைகாசி தானம்
வைகாசி குளிர்த்தி
வைகாசிப் பொங்கல்
வைகாசி மாதத்தில் நாம் செய்யும் புண்ணிய காரியங்களால் ஏற்படும் நன்மைகள் எவை?
ஜென்ம பாவங்களை நீக்கலாம்.
வைகாசி விசாக விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்படும்?
பூரண உபவாசம் இருந்து அல்லது பகல் நீங்கிய பின் சுவாமி தரிசனம் செய்து நீராகாரத்தை உட்கொள்ளலாம்.
வைகாசி விசாக நாளில் மேற்கொள்ள வேண்டிய நற்காரியங்கள் எவை?
ஆலய தரிசனம், திருமுறை ஓதுதல், புராணம் படித்தல், கேட்டல், சிவத்தொண்டு செய்தல், சமயப்பிரசங்கம் கேட்டல்.
ஆனி உத்தரம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?
ஆனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆனி உத்தரம் எதனால் விசேடம் பெற்றது?
சிதம்பர நடராஜர் தரிசனத்தினால் விசேடம் பெற்றது.
ஆனித் திருமஞ்சனம் என்றால் என்ன?
ஆனி உத்தர தினத்தில் நடராஜருக்குரிய விசேட அபிடேகம் நடைபெறுகிறது. அவ் அபிடேகத்தையே ஆனித் திருமஞ்சனம் என அழைப்பர்.
ஆனி உத்தரத்தின் சிறப்பு யாது?
இறைவன் (சிவன்) தனது அடியார்களுக்காக தில்லையில் திருநடனம் புரிந்தமை. இந்நாளிலேயே
ஆகும்.
நடராஜர் இந்த நடனத்தின் மூலம் பஞ்சகிருத்தியங்களையே புரிகிறார்.
ஆனி உத்தரத்தின் அன்று எவ்வாறு நடராஜருக்கு அபிடேகம் நடைபெறும்?
ஆனி உத்தர விழாவன்று சிவபிரானுக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் விசேட அபிடேகம் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து அலங்காரம், பூஜை, அர்ச்சனை, தோத்திரம் ஆகியன இடம்பெறும்.
அபிஷேகத்தின் சிறப்பு யாது?
சிவபெருமான் அபிஷேகம் பிரியர், ஒவ்வொரு அபிஷேகப் பொருளும் ஒவ்வொரு நற்பயனை அளிப்பதாகும்.
அபிஷேகத் தீர்த்தத்தின் சிறப்பு யாது?
அடியார்களுக்கு ஆன்மீக நிறைவையும், புனிதத்தையும் நல்லாரோக்கியத்தையும் அருளும், இது அருட்பிரசாதமாகும்.
ஆனி உத்தர உலா எவ்வாறு நடைபெறும்?
நடராஜப் பெருமான் சிவகாம சுந்தரி சமேதராக வீதிஉலா வந்து அருள்புரிவார்.
ஆனி உத்தர உலா சிறப்பாக எங்கு நடைபெறும்?
சிதம்பரத்தில்
ஆனி உத்தர விரதம் எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும்?
அடியார்கள் இப்புண்ணிய தினத்திலே ஒரு வேளை உணவையேனும் தவிர்த்து விரதமிருந்து சிவதரிசனம் செய்ய வேண்டும்.
ஆனி உத்தர விரதம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கல்யாண சுந்தர விரதம்