சமயம்

கண்ணப்ப நாயனார் வினா விடை

கண்ணப்ப நாயனாரின் ஊர் எது ?
உடுப்பூர்

கண்ணப்ப நாயனாரின் குலம் யாது?
வேடுவர் குலம்

கண்ணப்ப நாயனாரின் தாய், தந்தையர் யாவர்?
தாய் – தத்தை
தந்தை – நாகன்

நாகனின் சிறப்பு யாது?
வேடுவர் குலத் தலைவன்

இவரது இயற்பெயர் யாது?
திண்ணன்

திண்ணனின் ஆற்றல் யாது?
வில்வித்தை கற்று அதிலே சிறந்து விளங்கினான்.

திண்ணன் யாருடன் வேட்டையாடச் சென்றான்?
தோழர்களான “நாணன்”, “காடன்”, என்பவர்களுடன்

மூவரும் நீர் தேடி எந்த ஆற்றுக்குச் சென்றனர்?
பொன்முகலி ஆறு

பொன்முகலி ஆற்றுக்கு எதிரே உள்ள மலை யாது?
காளத்தி மலை

காளத்தி மலையிலுள்ள இறைவன் யார்?
காளத்திநாதர் எனப்படும் குடுமித்தேவர் ஆவார்.

திண்ணனாருக்கு காளத்தி மலையில் ஏறும்போது ஏற்பட்ட மாற்றம் யாது?
திண்ணனாருக்கு ஏதோ பாரம் குறைவது போலிருந்தது. உள்ளத்தில் இனம் புரியாததொரு இன்பம் உண்டானாது.

திண்ணனார் காளத்தியப்பரை வழிபட்டமையினால் ஏற்பட்ட மாற்றம் யாது?
இறைவன் திருநோக்கால் முன்னுள்ள குணங்கள் மாறி அன்புருவமானார்.

கசிந்துருகிய திண்ணனார் இறைவனை நோக்கி யாது கூறினார்?
“ஐயையோ கொடிய மிருகங்களுள்ள காட்டில் யாதொரு துணையுமில்லாமல் நீர் தனியே இருக்கின்றீரே” என்று கூறி வருந்தினார். மேலும் “எம் பெருமானே! நீர் பசியோடு இருக்கின்றீர் போல் தோன்றுகிறது. அடியேன் உமக்கு மென்மையான நல்ல இறைச்சி கொண்டு வருவேன்” என்று மெய்யன்போடு கூறினார்.

திண்ணனார் இறைவனது இறைச்சியை எவ்வாறு தயார் செய்தார்?
பன்றி இறைச்சியைத் தாமே நெருப்பில் வாட்டினார். வெந்த இறைச்சித் துண்டுகளை மென்று சுவை பார்த்து நல்லனவற்றை மட்டும் தேக்கிலைக் கல்லையிலே வைத்தார்.

திண்ணனார் இறைவனுக்கு அபிஷேகம், பூசை செய்ய எவற்றைத் தயார் செய்தார்?
எம்பெருமானைத் திருமஞ்சனமாட்டும் பொருட்டு ஆற்றுநீரை வாயினுள் முகர்ந்தார். அருகில் மலர்ந்திருந்த பூக்களைக் கொய்து குடுமியிலே செருகினார் பின்னர் அம்பையும், வில்லையும் எடுத்துக்கொண்டு மலை உச்சியை அடைந்தார்.

திண்ணனார் திருக்காளத்தி நாதருக்குப் பசியைப் போக்கச் செய்த செயல் யாது?
திருக்காளத்தி நாதருக்கு மஞ்சனமாட்டி, பூச்சூட்டி, இறைச்சியைத் திருவமுதாகப் படைத்தார். அன்றிரவு முழுவதும் தூங்காமல் வில்லும், கையுமாக இறைவனுக்குக் காவலிருந்தார். விடிந்ததும் இறைவனுக்கு ஊனமுது தேடிப் புறப்பட்டார்.

திருக்காளத்தியப்பருக்கு நாள்தோறும் சிவாகம விதிப்படி பூசை செய்தவர் யார்?
சிவகோச்சாரியார்

சிவகோச்சாரியார் மனம் வருந்தியதற்கான காரணம் யாது?
திருக்காளத்திநாதர் முன் எலும்பும், இறைச்சியும், சிதறுண்டு கிடக்கக் கண்டு மனம் மிக வருந்தினார்.

திண்ணனார் காளத்திநாதருக்குச் செய்த பணிவிடை யாது?
பகலில் வேட்டையாடி ஊனமுது தேடி இறைவனுக்கு அன்போடு திருவமுது செய்துவந்தார். இரவில் காளத்திநாதருக்குக் காவல் புரிந்து நின்றார்.
இவ்வாறு ஒப்புயர்வற்ற அன்பு நெறியிலே ஒழுகுவாராயினார்.

சிவகோச்சாரியார் இறைவனை இறைஞ்சி வேண்டியது யாது?
தினமும் இறைச்சி முதலானவற்றை நீக்கிய பின், விதிப்படி பூசை செய்வதனால் “இத் தீமையை உமதருளால் ஒழித்தருள வேண்டும்” என்று இறைவனை இறைச்சி தின்றார்.

திண்ணனாரின் அன்புப் பெருக்கத்தை சிவகோச்சாரியாருக்கு எவ்வாறு உணர்த்தினார்?
சிவகோச்சாரியாரின் கனவிலே தோன்றினார். “அவன் வடிவெல்லாம் நம்மிடத்துக் கொண்ட அன்பேயாம்” என்று கூறி, திண்ணனார் செயலை மறுநாள் மறைந்திருந்து பார்க்கும்படி கூறியருளினார்.

சிவகோச்சாரியார் ஒளித்திருந்து திண்ணனாரை நோக்கியபோது கண்ட காட்சிகள் எவை?
திண்ணனார் ஓடிவந்து காளத்தியப்பரை அடைந்தார். காளத்திநாதரின் வலக்கண்ணிலிருந்து இரத்தம் வடிந்ததைக் கண்டு துடிதுடித்தார். ஓடிச்சென்று பச்சிலை மருந்துகளைப் பிடுங்கி அவற்றைப் பிழிந்து எம்பெருமானின் கண்களில் வார்த்தார், இரத்தம் வடிதல் தடைப்படாமை கண்டு மிகவும் வருந்தினார். சுவாமியின் திருமேனியைப் பற்றியபடி கதறியழுதார். “ஊனுக்கு ஊனிடல் வேண்டும்” எனும் பழமொழி அவர் நினைவுக்கு வந்தது. கண்ணுக்கு கண் கொடுக்க விரும்பிய திண்ணனார் அம்பினாலே தம் கண்ணைத் தோண்டி இறைவனது கண்ணில் அப்பினார். உடனே இரத்தம் வடிதல் நின்றது, திண்ணனார் ஆனந்தத்துடன் கூத்தாடியமையை சிவகோச்சாரியார் கண்டார்.

காளத்தியப்பர் திண்ணனாரின் அன்புள்ளத்தை சிவகோச்சாரியாருக்கு உணர்த்த விரும்பி யாது செய்தார்?
தனது இடக்கண்ணிலிருந்தும் இரத்தம் வடியச் செய்தார். உடனே திண்ணனார் தனது செருப்புக்காலை எம்பெருமானின் கண்ணருகே அடையாளத்துக்காக ஊன்றி, மற்றைய கண்ணையும் தோண்ட அம்மை வைத்தார். அப்போது காளத்தியப்பர் “நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என்று திருவாய் மலர்ந்து தம் திருக்கரத்தால் திண்ணனாரைத் தடுத்தார். “மாறிலாய் என் வலத்தில் நிற்க” என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனைக் கண்டு சிவகோச்சாரியார் வியந்து நின்றார்.

கண்ணப்ப நாயனார் வினா விடை

திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டமைக்கான காரணம் யாது?
காளத்தியப்பர் திண்ணனாரை நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என திருவாய் மலர்ந்தருளியமையினால் கண்ணப்பர் எனப்பட்டார்.

இறைவன் பற்றி கண்ணப்ப நாயனார் வரலாறு கூறும் விடயம் யாது?
இறைவன் தன்னலமற்ற அன்புக்கு அடிமையாகும் தன்மையர் என்பது உணர்த்தப்பட்டது.

கண்ணப்ப நாயனார் வரலாறு மூலம் நாம் அடையும் படிப்பினை யாது?
நாமும் இறைவன் மீது தன்னலமின்றி அன்பு செலுத்தி நன்மைகள் பெறுவோம் என்பதாகும்.

“காப்பதோர் வில்லும் அம்பும்….” என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்?
திருநாவுக்கரசு நாயனார்

“காப்பதோர் வில்லும் அம்பும்….” என்ற பதிகம் குறிப்பாக எதனைக் குறிப்பிடுகிறது?
கண்ணப்ப நாயனார் இறைவன் மீது கொண்ட அன்மையும், அவரின் தோற்றப்பொலிவையும் கூறுகின்றது.

“காப்பதோர் வில்லும் அம்பும்…….” என்ற தேவாரத்தை வரிக்கிரமமாக எழுதுக.
திருச்சிற்றம்பலம்
காப்பதோர் வில்லும் அம்பும்
கையதோர் இறைச்சிப் பாரம்
தோற்பெரும் செருப்புத் தொட்டுத்
தூய வாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக்
குருதிநீர் ஒழுகத் தன் கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார்
குறுக்கை வீரட்டனாரே.
திருச்சிற்றம்பலம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button