புதுவருடப்பிறப்பு வினா விடை
பண்டிகை என்பதன் பொருள் யாது?
பெருநாள்,விசேட நாள்
பண்டிகை என்றால் என்ன?
சமயம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும், பல்வேறு வழிபாடுகள், விருந்துகளுடன் கொண்டாடப்படுவது பண்டிகை ஆகும்.
பண்டிகைக் காலங்களில் மக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எவை?
அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிவர். அதன்பின் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுபவர், விசேட உணவு வகைகளைத் தயாரித்து, உற்றார் உறவினருக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளித்து உண்பர்.
பண்டிகைக் கால இறைநம்பிக்கை யாது?
பண்டிகைகள் இறைவனோடு சம்பந்தப்படுத்தப்பட்டு, அக்காலங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகள், பொருட்கள், உணவு, புத்தாடை அணிவதும், மகிழ்ச்சியால் திளைப்பதும் இறைவனின் அருளினாலேதான் என உணர்தல்.
பண்டிகையினால் ஏற்படும் நன்மைகள் எவை?
உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்லுதல் உறவினர்களுடன் அளவளாவி மகிழ்தல்.
மனக்கசப்புக்களை மறந்து உறவைப் புதுப்பித்தல்.
குடும்ப அங்கத்தவரிடையே நெருக்கமான அன்புப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
நாம் கொண்டாடும் பண்டிகைகள் எவை?
தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி
மாதங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் காலப்பகுதியே மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன. சித்திரை மாதம் எவ்வாறு தோன்றுகின்றது?
சூரியன் மேடஇராசியில் பிரவேசிக்கும் காலமே சித்திரை மாதமாகும்.
புதுவருடப்பிறப்பு எவ்வாறு தோன்றுகிறது?
சூரியன் சித்திரை மாதத்தில் மேட இராசியில் சஞ்சரிக்கும் காலமே புதுவருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புதுவருடப்பிறப்பில் நாம் கொள்ளும் நம்பிக்கைகள் யாவை?
நாம் அனுபவித்த துன்ப, துயரங்கள் மறையும்.
பழைய பகைமைகள் நீங்கும்.
புத்தெழுச்சியும், புத்துணர்வும் ஏற்படும்.
சகல நன்மைகளும் மங்களமும் உண்டாகும்.
புதுவருடப்பிறப்பு பாரம்பரியங்கள் எவை?
மருத்துநீர் வைத்து நீராடுதல்.
வீட்டில் பொங்கலிட்டு பூசை செய்தல்.
புத்தாடை அணிதல்.
ஆலய வழிபாடு செய்தல்.
தாய், தந்தை, குரு, பெரியோர், உறவினர்களிடம் ஆசி பெறுதல்.
அறுசுவை உணவு உண்ணல்.
கைவிசேடம் பெறுதல்.
வகை வகையான பாரம்பரிய உணவுப்பண்டங்களை உண்டு மகிழ்தல்.
மருத்துநீர் எவ்வாறு ஆக்கப்படுகிறது?
ஆலயங்களில் அர்ச்சகர்களால் மருத்துவக் குணமுடைய இலைகள், பூ வகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை நீரில் இட்டுக் காய்ச்சி மருத்துநீர் தயாரிக்கப்படுகிறது.