சமயம்

சிவராத்திரி வினா விடை

  1. சிவராத்திரி என்றால் என்ன?
    சிவனுக்குரிய இராத்திரி என்பதால் சிவராத்திரி எனப்படும்.
  2. இவ் விரதங்களில் விசேடமானது எது?
    சிவராத்திரி
  3. சிவராத்திரி எத்தனை வகைப்படும்? அவை எவை?
    ஐந்து வகைப்படும்.
    மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, நித்திய சிவராத்திரி என்பனவாகும்.
  4. மஹா சிவராத்திரி எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?
    மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் நோற்கப்படுகிறது.
  5. சாதாரண இராத்திரி என்பது யாது?
    நாம் ஒவ்வொருநாளும் காணும் இராத்திரி சாதாரண இராத்திரி எனப்படும்.
  6. உண்மையான இருட்காலம் என்பது யாது?
    இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி நிற்கும் காலம் ஆகும்.
  7. இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி நிற்கும் காலம் எவ்வாறு அழைக்கப்படும்?
    சர்வசங்கார காலம், பிரளய காலம், ஊழி முடிவு, பேரிருட் காலம்
  8. பேரிருட் காலத்தில் தனித்து நிற்பவர் யார்?
    சிவபெருமான்
  9. படைப்புக் கடவுள் யார்?
    பிரம்மன்
  10. காத்தற் கடவுள் யார் ?
    விஷ்ணு
  11. தம்முள் யார் பெரியவர் என்று வாதிட்டவர்கள் யாவர்?
    பிரம்மாவும், விஷ்ணுவும்
  12. பிரம்மாவும், விஷ்ணுவும் தம்முள் யார் பெரியவர் என்று முரண்பட்டபோது அவர்கள் முன்நிகழ்ந்தது
    என்ன?
    சிவபெருமான் ஒளிப்பிளம்பாகத் தோன்றி, “இந்த ஒளிப்பிளம்பின் அடியையாவது முடியையாவது கண்டு வருபவரே பெரியவர்” என்று ஓர் அசரீரி ஒலித்தது.
  13. பிரம்மா முடியை எவ்வாறு தேடினார்?
    அன்னப்பட்சி வடிவம் எடுத்து பறந்து முடியை நோக்கிப் பறந்தார்.
  14. விஷ்ணு அடியை எவ்வாறு தேடினார்?
    பன்றி வடிவம் எடுத்து மண்ணைக் குடைந்து அடியைத் தேடினார்.
  15. பிரம்மாவினதும் விஷ்ணுவினதும் முயற்சி எவ்வாறு அமைந்தது?
    தோல்வியில் முடிந்தது.
  16. தோல்வியில் இருந்து இருவரும் எதனை உணர்ந்தனர்?
    தமது இயலாமையையும், சிவபெருமானே பரம்பொருள் என்பதனையும் உணர்ந்தனர்.
  17. அடி, முடி தேடிய வரலாறு உணர்த்தும் தத்துவம் என்ன?
    ஆணவம் கொண்டவர்களால் இறைவனை அறிய முடியாது, என்ற பேருண்மை வெளிப்படுத்தப்படுகிறது.
  18. சோதிப்பிழம்பாகத் தோன்றிய வடிவம் எது?
    இலிங்கோற்பவ மூர்த்தி
  19. இலிங்கோற்பவ மூர்த்தி தோன்றிய காலம் எது?
    சிவராத்திரி தினத்தில் இரவு 11.30 முதல் 12.15 வரை இலிங்கோற்பவர்காலம் எனப்படுகின்றது.
  20. இலிங்கோற்பவர் காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டியது யாது?
    நித்திரைகொள்ளாது, பக்தி பூர்வமாக வழிபடுவதற்குரிய புண்ணிய காலமாகக் கொள்ளப்படுகிறது. மேலும் இலிங்கோற்பவ மூர்த்திக்கு அபிஷேகமும், வில்வ அர்ச்சனையும் செய்வது மேலான பலனைத் தரும்.
  21. சிவராத்திரி தினத்தில் சிவனை வழிபட்டு பெரும்பேறு பெற்றவர் யாவர்?
    இந்திரன், குபேரன், இராஜசேகர பாண்டியன்
  22. மஹா சிவராத்திரியின் முன்தினம் யாது?
    திரயோதசி
  23. சிவராத்திரி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும்?
    மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமான திரயோதசியில் ஒருவேளை பகல் உணவருந்தி, மறுநாள் முழுவதும் உபவாசம் இருந்து, சிவராத்திரியின் மறுதினம் பாரணையில் உணவு உண்ண வேண்டும்.
  24. சிவராத்திரி விரதத்தின் முக்கியமான வழி யாது?
    சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது விழித்திருந்து, சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூசைகளின் போதும், இலிங்க தரிசனம் செய்வது முக்கியமான விதியாகும்.
  25. சிவராத்திரி விரதம் இருக்க இயலாதோர் யாவர்?
    பாலர், விருத்தர் (முதியோர்), நோயாளர்.
  26. சிவராத்திரி தினத்தில் விரதம் இருக்க இயலாதோர் என்ன செய்ய வேண்டும்?
    இலிங்கோற்பவ காலம் மட்டும் விழித்திருத்தல் சிறந்ததாகும்.
  27. சிவாலயங்களில் இலிங்கோற்பவர் எங்கே காணப்படுகிவார்?
    கருவறையின் மேற்குப்புறத்தில் காணப்படுவார்.
  28. சிவராத்திரி விரத மரபுகள், பலன்கள் பற்றிக் கூறும் புராணங்கள் எவை?
    கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், இலிங்க புராணம், சிவமகாபுராணம், சிவராத்திரி புராணம்.
  29. சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதனால் ஏற்படும் நன்மைகள் எவை?
    பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்.
    உலகில் நன்மை பெருகும்.
    வாழ்வு வளம் பெறும்.
  30. இறைவனின் அன்பையும், அருளையும் எவ்வாறு பெற முடியும்?
    உண்மை அன்பு, நேர்மை முதலான நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளும் போது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button