ஐநாவில் சீனா எமக்காகச் செய்தது மாபெரும் தியாகம் – பிரதமர்

ஐ.நா பொதுச் சபையில் சீனா எமக்காகச் செய்தது மாபெரும் தியாகமென பிரதமர் மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை” என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் ஷீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சீன வெளியுறவுத்துறை அமைச்சரை அன்புடன் வரவேற்கிறேன்.
அவரை எங்களின் மிக நெருங்கிய நண்பராக வரவேற்கிறோம்.

வரலாற்று ரீதியாக இலங்கையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒர் அரசின் பிரதிநிதியாகவும் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது.
உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன.

உங்கள் நாட்டிலிருந்து புனித யாத்திரைக்கு வந்த ஃபாஹியன் துறவி பதித்த பதிவுகள் இன்றும் நம் வரலாற்றின் வண்ணமயமான பகுதியாகும்.
அன்று பாஹியன் துறவி மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் எமது நாட்டுக்கு வந்ததைப் போன்று இன்றும் சீன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருகின்றனர்.

சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடுகள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல்வாங்கல்களை செய்துகொண்டிருக்கின்றன.

அன்று ஏற்படுத்தப்பட்ட இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தை நம்மவர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

‘எமது இரப்பர் உங்களிடமிருந்து அரிசி’. அதேபோன்று இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பினார்.

‘உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளுங்கள். அது சுதந்திரத்திற்கான வழி.’ நாம் அப்பாதையைக் கடைப்பிடித்தோம்.

இன்று உங்கள் நாடும் முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். கொரோனா தொற்றால் அது தடைப்பட்ட போதிலும், முழு உலகிற்கும் ஒரு முக்கிய முன்மாதிரியாக விளங்கவே முயற்சித்தோம்.

சௌசன்லாய் ஆரம்பித்த அணிசேரா கொள்கையை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். அந்தக் கொள்கை நம்மைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் பலமாக இருந்தது.

அதேபோன்று, 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கிறது.

பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது.  அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் நாடு கெரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில் ஒரு சீன பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நம் நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் குணமடைய வேண்டும் என நம் நாட்டு மக்கள் நட்புடன் பிரார்த்தித்தனர்.
உங்கள் நாடு கொரோனா தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தைரியம் அளித்தனர்.
முதல் சுற்றிலேயே உங்கள் சீன தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம்.
அந்தத் தருணத்தில் எமது ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எமது சார்பாக செய்த தியாகம் எமது மக்களுக்கு பெரும் பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

அத்தகைய நண்பரின் எதிர்கால வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கின்றோம். சீன அரசாங்கமானது எமக்கு போன்றே உலகிற்கு அந்நாடுகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன.

எனவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு நாங்கள் பெருமையுடன் வாழ்த்துகிறோம். “Belt and road” என்ற எண்ணக்கரு நமது நட்பை மேலும் மேம்படுத்தும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களே, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாம் அண்மையில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட்டோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

அத்துடன், இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காகவே துறைமுக நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.

இதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஒத்துழைப்பை நினைவுகூர்வதுடன், சீன அரசாங்கத்துடனான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்கள் வருகையை நாம் காண்கிறோம்”என பிரதமர் தெரிவித்தார்

Exit mobile version