தற்போது இலங்கையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 12ம் திகதி பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சமையல் எரிவாயு வெடித்ததனால் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று மாலை உயிரிழந்ததாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியை சேர்ந்த ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்து குறித்த பெண்ணை வெலிக்கந்த வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருவதோடு, விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
எனினும் புதிதாக வீட்டுக்கு கொண்டு வருகின்ற எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு கையாளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.