மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளை!
இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது மானிட பண்பு. தடை செய்யப்பட்ட அமைப்பினது உறுப்பினராக இருப்பினும், அவ் அமைப்பினது கொடிகள், அடையாளங்களினை பிர திநிதித்துவம் செய்யாமல் இறந்தவர்களினை நினைவு கூற முடியுமென முல்லைத்தீவு நீதிமன்று திருத்திய கட்டளையாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தோடு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உடைய நிகழ்வு ஒன்றாக நினைவுபடுத்த கூடியதாக நினைவுகூறல்களை நடாத்தாது இறந்தவர்களுக்கான பொது நினைவு கூரல்களை நடாத்த முடியுமெனவும் மாவீரர் நாள் தடை கட்டளையினை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 17ம், 23ம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம், மல்லாவி ,ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய துயிலுமில்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்து பொலிசார் தாக்கல் செய்த மனுவினை அடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டதரணிகள் குழாம் மூலம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதில் சட்டத்தரணிகள் கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், கேசவன் சயந்தன், வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நிதியானந்தராஜா ஆகியோர் இந்த தடையுத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.