அரசை விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை! மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை!

அரசாங்கத்தினையும் அதனது கொள்கைகளையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விமர்சிப்பதினை தவிர்ப்பதற்காக அரசினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகத்திற்கு எதிராக அரச ஊழியர்களின் விமா்சனங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அரச பொது நிர்வாக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரச துறைக்கு அவப்பெயரினை ஏற்படுத்தும் வகையில், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கும் பொதுத்துறைப் பணியாளா்களுக்கு கடும்  தண்டனைகள் விதிக்கப்படலாம் என்றும் அந்த சுற்றறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

சில அரச ஊழியர்களது கருத்துக்கள் தொடர்பில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியோடு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அமைச்சு கூறியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.

இரசாயன உரத்தில் இருந்து சேதன உரத்திற்கு மாறும் அரசின் கொள்கையினை விமர்சித்தமைக்காக பேராசிரியர் புத்தி மாரம்பேயினை விவசாய அமைச்சகம், அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version