கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக ஏ9 வீதியில் உள்ள பாதசாரி கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். அத்தோடு மற்றுமொரு மாணவி காய அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.15 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது:-
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உயர்தர வகுப்பு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில் மேற்கு பக்கத்தி லிருந்து பாடசாலை பக்கமாக பாதசாரி கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக திடீரென நிறுத்தியது.
இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்டர் ரக வாகனமும் நிறுத்தப்பட்ட போது பின்னால் வந்த இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ், ஹன்டர் ரக வாகனத்தை மோத, ஹன்டர் வாகனம் முன்னால் இருந்த பட்டாவுடன் மோத, குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலேயே திருவாசகம் மதுசாளினி (வயது 17) எனும் மாணவி உயிரிழந்ததுடன் மற்று றொரு மாணவி காயம் அமடைந்துள்ளார்.
இந்த மாணவியின் தந்தை சைக்கிளில் தினமும் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சிக்கு விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி.
மிகவும் வறுமைக்கு உட்பட்ட நிலையில் தன்னுடைய மகளை உயர்தரத்திற்கு கற்பிக்க அனுப்பிய நிலையில் முதல் நாளே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.