ஜப்பான் இளவரசி மகோ, தன்னுடைய கல்லூரி நண்பரை அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
ஜப்பானின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்தியான மகோ, 2012-ம் ஆண்டு தான் கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோவுடன் நட்பாக பழக பின் அது காதலாக மாறியது.
கீ கோமுரோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர், எனினும் இருவரும் திருணம் செய்து கொள்ளப்போவதாக 2017-ம் ஆண்டு அறிவித்திருந்தனர்.
இந் நிலையில் இவர்களது திருமணம் அக்டோபர் 26ம் தேதி நடைபெறவுள்ளது.
அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவர் அரசு குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில், இளவரசி மகோ தனது அரச பட்டத்தை துறக்கவுள்ளார்.
அரச திருமணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் இந்த திருமணத்தில் நடைபெறாது. அதே போல், அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு கோடி கணக்கில் பணம் அளிப்பது வழக்கம். ஆனால், மகோ அதனையும் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மகோவும் கீ கோமுரோவும் உள்ளூர் அரசு அலுவலகத்தில் தங்களின் பதிவு திருமணத்தை செய்யவுள்ளார்கள்.
தொடர்ந்து இருவரும் அமெரிக்காவில் குடியேறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.