ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன் போது நான்கு, ஏழு அங்குல மற்றும் எட்டு அங்குல கத்திகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் இருப்பதாக மேல் மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த தகவலின் படி, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது அவர்களுடைய தனிப்பட்ட பெட்டகத்தில் (Locker) மேற்கொண்ட சோதனையின் போது கூர்மையான ஆயுதங்கள் மற்றும் முகக் கவசங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர்கள் நிறுவனத்தில் ஒருவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா நடத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்கள் யாரைப் பின் தொடர்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.