தண்ணீரை கொதிக்க வைத்ததால் காட்டுத் தீ மூண்டது!
கனடாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்ட 30 வயது பெண் ஒருவர் மீது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தண்ணீரைக் கொதிக்க வைக்க முயன்றதால் காட்டுத் தீ மூண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா என்ற குறித்த பெண் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந் நிலையில் கடந்த புதன் கிழமை தொடங்கிய காட்டுத் தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும், அதில் இதுவரை 8,500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
நடைப் பயணத்தின் போது தாகமாக இருந்ததால், அங்குள்ள குட்டையில் இருந்த தண்ணீரைக் வடிகட்டி அருந்த முயன்றதாக சூவர்னேவா, கூறியுள்ளார். ஆனால், அது சாத்தியமில்லாமல் போக, தண்ணீரை கொதிக்க வைக்க முயன்ற போதும் நெருப்பை உண்டாக்க முடியவில்லை என்பதால் , நீரை அருந்தி விட்டு, நீரோடையலிருந்து மேல் நோக்கி சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் புதரில் மாட்டிக் கொண்ட அவர், தீயணைப்புத் துறையைத் தொடர்பு கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டார். இதன் போது அவரிடம் தீப்பற்ற வைக்கும் கருவிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 9 ஆண்டுகளிற்கு மேல் சிறைத் தண்டனைஅனுபவிக்க வேண்டியிருக்கும்.