வைத்தியசாலை குண்டு விவகாரம்! மேலும் ஒருவர் கைது!
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தோடு தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கி பரிசு பெறும் நோக்கத்தோடு கடந்த 14ம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் வைக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.
கொழும்பில் விஜேராம மாவத்தையில் உள்ள முக்கிய அரசியல்வாதியின் வீட்டில் இருந்ஹ்டு குண்டை பெற்று கொண்டதாக பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அரச புலனாய்வு சேவை மற்றும் கொழும்பு குற்றப் பிரிவினர் முக்கிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வறுமையால் பாதிக்கப்பட்டவரின் பணத் தேவையைப் பயன்படுத்தி இன்னொருவர் வெடிகுண்டை வெடிக்க வைக்க முயன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.
முதல் சந்தேக நபருக்கு கைக்குண்டை வழங்கியதாக கூறப்படும் திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபர், தனக்கு கைக்குண்டு வழங்கியவர், உப்புவெளியில் உள்ள ஒரு இந்து ஆலயத்திற்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கையெறி குண்டுகளை எவ்வாறு செயல்படுத்துவது தொடர்பில் அடிப்படைப் பயிற்சி வழங்கியதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இந்த பயிற்சி ஆறு நாட்கள் நடத்தப்பட்டதாகவும், அவர் துப்பாக்கிகளின் புகைப்படங்களைக் காட்டியதாகவும் அது பற்றிய பல தகவல்களை தந்ததாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபரால் கைக்குண்டு முக்கிய சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதா அல்லது முன்னர் கூறியது போல் சந்தேகநபர் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் இருந்து குண்டை பெற்றாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.