இலங்கை அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்கவேண்டும் என நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹம்சி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற டிஜிட்டல் செய்தியாளர் மாநாடு தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
“உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களுடன் டிஜிட்டல் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தேன். நோர்வே நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.
நான் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை பலருக்கு பெரும் விடயம் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். யுத்தம் குறித்து விசாரணை செய்யப்படவேண்டும்.
இலங்கையின் போரில் இறுதி இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐநா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இதனால் இலங்கை அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்கவேண்டும்.
ஏனென்றால் ஜனநாயகத்தில் வெளிப்படை தன்மை என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். நல்லிணக்கத்திற்கும் இது அவசியமான விடயமாகுமாகும். யுத்தம் மோதல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.