தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது பரபரப்பானது.
இதையடுத்து நடிகர் விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சமீபகாலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.
ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினரின் இச் செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது.
இது போன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப் பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.