சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி!
சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவூட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட நிறுவனமான சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் முன்னுரிமையுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் சுற்றுலாத்துறையினால் அதற்கு கிடைக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். இந்நாட்டின் சுமார் மூன்று மில்லியன் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரமாகவும், தமது வர்த்தக இலக்குகளை அடைந்துக் கொள்வதற்குமான பணி நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான மார்க்கமாகும் என்பதையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரான அமைதியான மற்றும் சுதந்திரமான சூழல் இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் வேகமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. எனினும் அதன் பின்னரான காலப்பகுதியில் நாட்டினுள் இடம்பெற்ற பாதுகாப்பற்ற செயற்பாடுகள் மற்றும் கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை மற்றும் அதில் தங்கிவாழும் மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
மக்களை பாதுகாத்து இந்த தொற்றை எதிர்கொள்ளும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் முன்னேற்றத்திற்கமைய வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சூழலை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே செயற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கன் விமான சேவையானது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக தேசிய விமான சேவையின் பணிகளை நிறைவேற்றி வருகின்றது.
இயற்கை அழகு மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் நிறைந்த எமது தாய்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தொற்று நிலைமைக்கு மத்தியிலும் அதற்கு முகங்கொடுத்து ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணித்து வருகின்றோம். அதனால் உலகின் பேண்தகு இலக்கிற்கு ஏற்ற வகையிலான சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
´ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை´ என்ற காலத்திற்கு உகந்த தொனிப்பொருளுக்கு அமைய இம் முறை கொண்டாடப்படும் சர்வதேச சுற்றுலா தினத்திற்கு நாம் மிகுந்த ஆர்வத்துடன் ஒன்றிணைவதுடன், இலங்கைக்கு சுற்றுலா வரும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பயண அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது இலங்கையர் எமது எதிர்பார்ப்பு என்பதையும் நினைவுகூருகின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.