இலங்கை

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் -சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு என அக்குழுவின் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந்தத் தேர்தலை விரைவில் நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’ பாராளுமன்ற விசேட குழுவில் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன், இந்தக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்புவாக்கு முறையை முழுமையாக நீக்குவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், தொகுதிக்குப் பொறுப்பான உறுப்பினர் இருப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொள்கை ரீதியாக அரசியலை முன்னெடுக்கும் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் இங்கு குறிப்பிட்டார்.

தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

20 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்தக் குழு முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் நிறைவேற்று அதிகாரியுமான அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் ஆகிய துறைகளுக்கிடையிலான சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இது பிரயோக ரீதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அஜித்.பி. பெரேரா தெரிவித்தார். இதே போல, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தல்கள் தொடர்பான அனைத்து மறுசீரமைப்புக்களின் போதும் வாக்களிக்கும் அதிகாரம் மக்களின் இறைமையின் ஒரு அங்கமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனநாயகத்தின் கோட்பாடு இதன் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்துத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்தப்படுவது அவசியமானதாகும். பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் யாவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அஜித்.பி. பெரேரா விசேட குழு முன்னிலையில் வலியுறுத்தினார்.

தேர்தல் பிரசாரங்களுக்கான செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்குப் புதிய சட்டதிட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுடன், இளையோர் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இரட்டைப் பிரஜாவுரிமை தகுதியற்ற விடயமாக்கப்பட வேண்டும் என்றும், தகுதியுடைய சகல வாக்காளர்களையும் பதிவு செய்வதற்கு உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அஜித்.பி. பெரேரா இங்கு தெரிவித்தார்.

தேர்தல்களில் போட்டியிடும் தரப்புக்களுக்கு அரச மற்றும் தனியார் ஊடகங்களில் வழங்கப்படும் ஒளிபரப்புக் காலம் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது.

தேர்தல்கள் குறித்த கால அட்டவணை ஒன்று நாட்டில் காணப்பட வேண்டும் என்றும், இதன் ஊடாக மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் 29 ஆம் திகதி நடைபெறும் என இதன் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button