சுகாதார துறை சீர் குலையும் விளிம்பில் ஆப்கானிஸ்தான் டெட்ரோஸ் அதானம் தெரிவிப்பு!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டில் சுகாதாரத் துறை சரிவின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆதிக்கத்தில் உள்ள நிலையில், அதன் தற்போதைய சுகாதாரத்துறை நிலை குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் (Tedros Adhanom),

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் அந் நாட்டு சுகாதார துறை சீர் குலையும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் யார் உயிரை காப்பாற்றுவது ? யார் உயிரை காப்பாற்றாமல் விடுவது ? என்பதை முடிவெடுக்க முடியாமல் அந் நாட்டு சுகாதார துறை திணறி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

அந் நாட்டுக்கு போதுமான உதவிகள் இல்லாததால் மிகப் பெரிய சுகாதார திட்டங்கள் கிடப்பில் இருப்பதாக அவர் கவலை வெளியிட்டார். அத்துடன் , மருந்துகளை வாங்க முடியாமலும், ஊதியம் வழங்க முடியாமலும் சுகாதாரத்துறை ஸ்தம்பித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த தடையால் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சுகாதார வசதிகள், அவசரகால உதவிகள், போலியோ ஒழிப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முயற்சிகள் போன்றவை ஆப்கானிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரரோஸ் அதானம் எச்சரித்துள்ளார்.

Exit mobile version