கரடியை கொன்ற ஆடு கனடாவில் சம்பவம்!

கொடுங்கரடி என அழைக்கப்படும் Grizzly bears என்னும் கரடிகள் மிகவும் பயங்கரமானவை. அவற்றை எந்த விலங்காலும் எதிர்த்து நிற்க முடியாது.

ஆனால், ஒரு ஆடு அந்த பயங்கர கரடியை எதிர்த்து நின்று கொன்ற ஒரு அபூர்வ நிகழ்வு கனடாவில் நிகழ்ந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள Yoho National Park என்ற வன விலங்குகள் பூங்காவில், கடந்த 4ஆம் திகதி ஒரு Grizzly bear வகை கரடி இறந்து கிடந்துள்ளதை ஒரு மலையேற்ற வீரர் கண்டுபிடித்துள்ளார். அந்த கரடி 70 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கிறது. அதற்கு உடற்கூறு ஆய்வு செய்ததில் அந்த கரடி மலை ஆடு ஒன்றினால் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அதன் கழுத்து மற்றும் கைகளுக்கு கீழே ஆட்டின் கொம்புகளால் குத்தப்பட்ட காயங்களை தெளிவாக காண முடிந்திருக்கிறது.

பொதுவாக, இந்த வகை கரடிகள், தான் உணவுக்காக வேட்டையாடும் விலங்கின்மீது, மேலிருந்து பாய்ந்து அதன் கழுத்தைக் கடிக்கும். ஆனால், இந்த ஆடு, அந்த கரடி தன் மீது பாயும்போது, தன் கொம்பால் அதை முட்டியிருக்கிறது. கடைசியில் கரடி இறந்துபோக, ஆடு உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ஆடுகளும் தங்களைக் காத்துக்கொள்ள போராடும் என்றாலும், ஒரு ஆடு ஒரு கரடியைக் கொல்வது என்பது மிகவும் அபூர்வமாகும்.

Exit mobile version