வவுனியா குட்செட் வீதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்றைச் சேர்ந்த நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று (20.09) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் திருட்டில் ஈடுபடும் போது வீட்டு உரிமையாளர் அவதானித்ததைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளரைத் தாக்கி கழுத்தை நெரித்து ஒருவர் பிடித்து வைத்திருக்க, திருட்டில் ஈடுபட வந்த மற்றையவர் அவரை தாக்கிய பொழுது வீட்டிலிருந்த உரிமையாளரின் மருமகன் அதனைத் தடுத்துக் கைகலப்பில் ஈடுபட்டார்.
அயல் வீட்டில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அயலவர்கள் ஓடி வரவும் சுதாகரித்த திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். எனினும், ஒருவர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் திருடனைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், 50,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருட்டில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் கொண்டு சென்றுள்ளனர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்தின் ரீசேட் அணிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.