கனடாவில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மிக வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில், ஒரு குடும்பமே பலியான பரிதாபம் நிகழ்ந்தது.
நேற்று, கியூபெக்கிலுள்ள Montérégie என்ற இடத்தில், குறுக்குச் சாலை ஒன்றில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், தனது காரை நிறுத்தி விட்டு சிக்னல் மாறுவதற்காக காத்திருந்திருக்கிறார் 42 வயது பெண் ஒருவர்.
அந்த காரில் அவருடன் அவரது 15 வயது மகனும், 13 வயது மகளும் இருந்திருக்கிறார்கள்.
அப்போது, மிக வேகமாக வந்த ட்ரக் ஒன்று அந்த கார் மீது மோதியுள்ளது. அந்த ட்ரக் மோதிய வேகத்தில், பல மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த கார் முற்றிலும் சிதைந்து போனது.
இந்த சம்பவத்தில், அந்த தாய் மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் என மூவருமே பலியாகினர்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், ட்ரக்கின் சாரதி மது அருந்தியதாகவும் தெரியவில்லை. அந்த 65 வயது நபர் (சாரதி) காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சற்று உடல் நிலை தேறியதும் அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
சட்டத்துக்கு கீழ்ப்படிந்து சிக்னலில் காத்திருந்த நிலையில், ஒரு குடும்பமே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.