நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் லொனெக் மீனாட்சி பிரிவைச் சேர்ந்த சின்னையா ராஜா 36 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தை என்றும் மற்றைய நபர் சிலாபம் பகுதியிலிருந்து வேலைக்காக வருகை தந்த சச்சிந்த தில்ஷான் வயது 21 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, லொனெக் பகுதியில் அபிவிருத்தி பணியில் ஈடுப்பட்டிருந்த நிலையில் பணியினை முடித்து விட்டு குளிப்பதற்காக குறித்த குளத்திற்கு மேலும் இரண்டு பேருடன் சென்றுள்ளனர். அப்போது ராஜா என்ற நபர் முதலில் குளத்தில் குதித்துள்ளார்.
அவர் நீரில் மூழ்குவதனை கண்ட அவரது நண்பர் தில்ஷான் அவரை காப்பாற்றுவதற்காக குதித்த போதே இருவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
இருவரையும் பிரதேசவாசிகள் தேடும் பணியில் ஈடுப்பட்ட போதிலும் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மற்றும் இராணுவத்திற்கும் அறிவித்ததனை தொடர்ந்து இன்று (20) சுழியோடிகளால் குறித்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இருவரின் சடலங்கள் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.