இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் இரண்டையும் வழங்கி, பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UCG) தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை துரிதமாகத் திறப்பது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு நேற்று (17) தெரிவித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து இதற்காக துரித வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் கல்வி சாரா துறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 30 வயதிற்குட்பட்ட கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அந்தந்த மாவட்டங்களில், அருகிலுள்ள சுகாதார சேவை மையங்களுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் 30 வயதுக்கு மேற்பட்ட மற்றும் அதற்கு கீழ்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இரு தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளன. வரும் ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இத்தினங்களில் இடம்பெற்று வருகின்றது. இந்த நோக்கத்திற்காக பணியாளர்களை பணிக்கு அழைப்பது அவசியமாக காணப்பட்டமையினால் சிறப்பு அனுமதியினை பெற்று கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக பேராசிரியர் தெரிவித்தார்
பல்கலைக்கழகங்களில் 30 வயதிற்குட்பட்ட பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்படுத்தப்படுகின்ற தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த மேற்பார்வை செயன்முறையொன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நேரடி கண்காணிப்பில் செயற்படுத்தப்படுகிறது. அம்முன்னேற்றத்தினை கவனத்திற் கொண்டு சுகாதார பிரிவினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் தற்போது மூடப்பட்டிருந்தாலும் உரிய அனைத்து கல்வி மற்றும் கல்வி சாரா நடவடிக்கைகளும் எவ்வித தடைகளுமின்றி நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.